புத்ராஜெயா: மலேசிய குடிநுழைவுத் துறை தனது பணிச் செயல்முறைகளிலும் சேவைகளிலும் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக அதன் தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபன் தெரிவித்துள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் திரு அஸாம் பாகி வெளிப்படுத்திய கவலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்த மேம்பாடுகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
“வெளிநாட்டவர்களைக் கடத்துவதற்காக சேவை முகப்பு அமைப்புகளை சட்டவிரோதக் கும்பல்கள் பயன்படுத்த அனுமதித்த 11 முக்கியமான பலவீனங்களை ஒப்புக்கொள்கிறோம்,” என்று வியாழக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிநுழைவுத் துறையில் காணப்படும் அந்தக் குறைபாடுகள், உள்கட்டுப்பாடுகளில் முக்கிய பலவீனமாக உள்ளது. இது சட்டவிரோத முகவர்களுக்கு குடிநுழைவு அதிகாரிகளை அணுகுவதை எளிதாக்கியது என்று புதன்கிழமை (செப்டம்பர் 18) திரு அசாம் கூறினார்.
வெளிநாட்டினரை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர சட்டவிரோதக் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 49 குடிநுழைவுத் துறை பணியாளர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அத்தகைய தவறான நடத்தையை குடிநுழைவுத் துறை அறவே சகித்துக்கொள்ளாது என்றும் காவல்துறைக்கு எம்ஏசிசி முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் திரு ஷாபன் தெரிவித்தார்.
“தனிப்பட்ட ஆதாயத்திற்காக தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சட்டத்தை மீறும் எந்த அதிகாரியும், அவர் எந்தப் பதவியை வகித்தாலும் கருணை காட்டப்பட மாட்டாது,” என்று திரு ஷாபன் எச்சரித்தார்.
நாட்டின் அனைத்து நுழை வாயில்களிலும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தக் கடுமையான நிலைப்பாட்டின் நோக்கம் என்று அவர் கூறினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 50 அமலாக்க அதிகாரிகள் உட்பட 60 பேரைத் தடுத்து வைத்திருப்பதை திரு அசாம் புதன்கிழமை உறுதிப்படுத்தினார். இதில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய, “சேவை முகப்புகளை ஒதுக்கியதாக” சந்தேகிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கிய ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


