வெலிங்டன்: நியூசிலாந்துக்குக் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அண்மை ஆண்டுகளாக அந்நாட்டில் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் அதிக அளவில் வெளியேறினர். அது நியூசிலாந்துக்குப் பெரிய கவலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது நிலவரம் மாறி வருகிறது.
2025 அக்டோபர் மாதம் 10,308 பேர் நியூசிலாந்தில் குடியேறினர். அதேபோல் நவம்பர் மாதம் 10,681 பேர் குடியேறினர்.
இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு 135,000 குடியேறிகள் நியூசிலாந்தில் குடியேறினர். அதன்பிறகு சரிவு தொடங்கியது.
2024, 2025ஆம் ஆண்டுகளில் பொருளியல் மந்தநிலை ஏற்பட்டதால் நியூசிலாந்தைவிட்டு மக்கள் அதிகமாக வெளியேறினர். போதிய வேலை வாய்ப்புகளும் இல்லாததால் வெளிநாட்டுக் குடிமக்களும் நியூசிலாந்துக்குச் செல்லத் தயக்கம் காட்டி வந்தனர்.
அருகில் உள்ள ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வாய்ப்பு கிடைப்பதாலும் நியூசிலாந்து மக்கள் அங்குச் செல்கின்றனர்.
பொருளியல் மீட்சிப்பெறத் தொடங்கிவிட்டால் மக்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவார்கள் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

