பயண விதிமீறல்: ஜோகூர் பாருவில் வெளிநாட்டவர் 108 பேர் தடுத்து வைப்பு

பயண விதிமீறல்: ஜோகூர் பாருவில் வெளிநாட்டவர் 108 பேர் தடுத்து வைப்பு

படம்: தி ஸ்டார்

22 Jul 2026 - 2:55 pm

1 mins read

ஜோகூர் பாரு: பயண விதிகளை மீறியதாகக் கூறி, ஜோகூர் பாருவில் வெளிநாட்டினர் 108 பேரை மலேசியக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) இரவு தாமான் ஸ்ரீ பஹாகியாவில் உள்ள வணிக வளாகங்களில் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் உணவகங்கள், கைப்பேசி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையுடன் இணைந்து குடிநுழைவுத் துறை அச்சோதனைகளை மேற்கொண்டது.

அங்கிருந்த வெளிநாட்டவர்கள் முறையான பயண ஆவணங்களையும் அனுமதிச்சீட்டுகளையும் வைத்திருந்தனரா என்று சோதிக்கப்பட்டது. அதனையடுத்து, பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காக 101 ஆண்களும் ஏழு பெண்களும் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் 18 முதல் 49 வயதிற்குட்பட்டவர்கள்.

பிடிபட்டவர்கள் இந்தோனீசியா, நேப்பாளம், இந்தியா, மியன்மார், பங்ளாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் முகம்மது ருஸ்டி முகம்மது டாருஸ் தெரிவித்தார்.

பிடிபட்ட அனைவரும் மேல்விசாரணைக்காக செத்தியா டிரோப்பிகா குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், விசாரணையின்போது சாட்சியமளிக்க உள்ளூர்வாசிகளுக்கும் இரு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகுடிநுழைவுவெளிநாட்டவர்