பெட்டாலிங் ஜெயா: சோதனையின்றி வெளிநாட்டவர்களை அனுமதித்தத சந்தேகத்தின்பேரில் மலேசியக் குடிநுழைவுத் துறை தனது அதிகாரி ஒருவரைக் கைதுசெய்துள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் வியாழக்கிழமை (மார்ச் 27) நண்பகலில் அவரைக் கைதுசெய்ததாகக் குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
“பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலும் கண்காணிப்பின் அடிப்படையிலும் அந்தக் குடிநுழைவு அதிகாரியைச் சோதனையிட்டோம். அப்போது அவரிடம் ஒன்பது பாகிஸ்தானியக் கடப்பிதழ்களும் இரண்டு இலங்கைக் கடப்பிதழ்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று திரு ஷாபான் விவரித்தார்.
தங்களது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தும் குடிநுழைவு அதிகாரிகளிடத்தில் எந்தச் சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அவர்களைப் பாதுகாக்க மாட்டோம் என்றும் திரு ஷாபான் உறுதிபடக் கூறினார்.
“அதிகாரி ஒருவர் தவறிழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர் பணிநீக்கமும் செய்யப்படலாம்,” என்றார் திரு ஷாபான்.
“தன்னுடைய அதிகாரிகள் எப்போதும் மிகுந்த நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்பதில் குடிநுழைவுத் துறை தீவிரக் கடப்பாடு கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

