தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
விமான நிலையத்தில் எச்சரிக்கை அறிவிப்புகள்

சீனப் பயணிகளிடம் மிரட்டிப் பணம் பறிப்பு: சுங்க அதிகாரிகள் நீக்கம்

2 mins read
0e2d27ec-aabc-4e5e-88c1-d86dfc8a1dde
அனைத்துலகப் பயணிகளுக்கும் குடிநுழைவு அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகளைக் குறைப்பதற்காக தானியக்க வருகைப் பதிவு இயந்திரங்கள் விமான நிலையத்தில் அதிகரிக்கப்பட்டு வருவதாக இந்தோனீசிய அரசாங்கம் குறிப்பிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜகார்த்தா: சோகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் மிரட்டிப் பணம் பறித்த சம்பவங்கள் தொடர்பாக இந்தோனீசியாவில் உள்ள சீனத் தூதரகம் அளித்த புகாரின் அடிப்படையில் விமான நிலையப் பணியிலிருந்து 30 குடிநுழைவு அதிகாரிகள் அகற்றப்பட்டுள்ளனர்.

இது சுற்றுலாப் பயணிகள் தொடர்பான ஒரு விவாதத்தையும் எழுப்பியுள்ளது.

இது குறித்து ஜனவரி 21ஆம் தேதி ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களால் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட கடிதம் பரவலாகப் பரப்பப்பட்டது.

அதில், 2024ல் 54.8 மில்லியன் பயணிகளை வரவேற்ற இந்தோனீசியாவின் பரபரப்பான விமான நிலையத்தில், 60க்கும் மேற்பட்ட சீன நாட்டவர்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கப்பட்ட குறைந்தது 44 சம்பவங்கள் குறித்து முறையான புகார் தெரிவிக்கப்பட்டது.

கடிதத்தை உறுதிப்படுத்த ஜகார்த்தாவில் உள்ள சீனத் தூதரகத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அணுகியது.

பிப்ரவரி 2ஆம் தேதி குடிநுழைவு, திருத்த அமைச்சு 30 குடிநுழைவு அதிகாரிகளை நீக்குவதாக அறிவித்தது. அதே நேரத்தில், அனைத்துலகப் பயணிகளுக்கும் குடிநுழைவு அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகளைக் குறைப்பதற்காக தானியக்க வருகைப் பதிவு இயந்திரங்கள் விமான நிலையத்தில் அதிகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அகஸ் ஆண்ட்ரியாண்டோ கூறினார்.

அந்தத் திட்டம் குறித்தோ மிரட்டிப் பணம் பறிக்கப்படும் முறை பற்றியோ அவர் விவரங்களைத் தெரிவிக்கவில்லை. சீன நாட்டுப் பயணிகள் ஒவ்வொருவரும் வருகையின்போது விசாவுக்கு 500,000 ரூபியா ($42 சிங்கப்பூர் வெள்ளி) செலுத்த வேண்டும்.

குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, விமான நிலையத்தில் சீன, அரபி, ஆங்கிலத்தில் அறிவிப்புகளை விமான நிலைய குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் அரசாங்கம் வைத்துள்ளது. கூடுதல் பணம் கொடுப்பது குறித்து எச்சரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

“அவர்கள் தங்கள் கடமையை அர்ப்பணிப்புடன் ஆற்றாவிட்டால், இந்தோனீசியாவிற்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றால், விசாரித்து, விதிமுறைகளுக்கு இணங்க நடவடிக்கை எடுப்பேன்” என்று தவறிழைக்கும் அதிகாரிகள் குறித்து திரு. அகுஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

சீனாவிலிருந்து வரும் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தோனீசியா முயன்று வருகிறது. 2024ல் 1.2 மில்லியன் சீனப் பயணிகளை அந்நாடு வரவேற்றது. முந்தைய ஆண்டைவிட அந்த எண்ணிக்கை 52 விழுக்காடு அதிகமாகும்.

குற்றவாளிகளைப் பதவியிருந்து நீக்குவதற்குப் பதிலாக, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2024 பிப்ரவரிக்கும் 2025 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் சட்டவிரோதக் கட்டணம் செலுத்திய சீன நாட்டவர்களுக்கு இந்தோனீசிய அரசாங்கத்தின் உதவியுடன், மொத்தம் 32.8 மில்லியன் ரூபியா திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக சீனத் தூதரகத்தின் கடிதம் குறிப்பிட்டது.

ஊழல் குறைந்த நாடுகள் குறித்து 2023ல் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் 180 நாடுகளில் 5 இடங்கள் சரிந்து இந்தோனீசியா 115வது இடத்திற்கு வந்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா ஆகியவை முறையே ஐந்தாவது, 57வது இடங்களில் ஊழல் குறைந்த நாடுகளாக அதே ஆய்வில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்