மலேசியாவின் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள்

மலேசியாவின் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள்

2 mins read
8564f5b9-dcc3-43b5-89b6-b66fdbe42671
மலேசியாவில் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கை சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது.  - மாதிரிப்படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: மலேசியாவில், வரும் புதன்கிழமையிலிருந்து (ஏப்ரல் 15) அரசாங்க ஊழியர்கள் சிலர் வாரத்திற்கு மூன்று நாள்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஆயத்தமாகின்றனர்.

இந்நிலையில், வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கை தனியார்த் துறைக்கும் நீட்டிக்கப்பட்டால் ஒழிய, அதிக எரிபொருள் சேமிப்புகளைக் காணும் சாத்தியம் குறைவு என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும், தனியார்த் துறையில், கட்டாயமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்று மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

நாடு முழுவதும் அக்கொள்கையை நடைமுறைப்படுத்தினால், பயனீட்டாளர்ச் செலவினம் குறையக்கூடும் என்றும் அதனால், பொருளியல் பாதிக்கப்படக்கூடும் என்றும் வர்த்தகங்கள் எச்சரித்துள்ளன.

இதற்கிடையே, வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையிலிருந்து விலக்குப் பெற்ற அரசாங்க ஊழியர்கள், தங்களுக்கு அதிருப்தி இல்லை; எனினும், கூடுதல் ஊழியர்களைச் சேர்த்துக்கொள்ளவும் அதிகபட்ச எரிபொருள் சேமிப்புகளை அடையவும் அக்கொள்கையில் நீக்குப்போக்கு கொண்டுவரப்படலாமா என்பது குறித்து யோசிப்பதாக ‘சிஎன்ஏ’ செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

தகுதிபெறுவோர் அந்த ஏற்பாட்டை வரவேற்றனர். இருப்பினும், சில பணிகளை முடிக்கக் கூடுதல் நேரமாகக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையை சென்ற வாரம் அறிவித்தார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பூசலால் எரிசக்தி விநியோக இடையூறுகளைக் குறைக்கும் நோக்கில், அந்த அறிவிப்பு செய்யப்பட்டது.

அது, அமைச்சுகள், முகவைகள், ஆணைபெற்ற அமைப்புகள், அரசாங்கச் சார்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும். ஆனால், அதிமுக்கியச் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வித் துறைகளில் உள்ள ஊழியர்கள் பொதுவாக அக்கொள்கையிலிருந்து விலக்கப்படுகிறார்கள்.

அதோடு, கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர், மாநிலத் தலைநகரங்கள் ஆகியவற்றில் வேலைசெய்வதோடு, தங்கள் அலுவலகத்திலிருந்து 8 கிலோமீட்டருக்கு அப்பால் வசிக்கும் அரசாங்க ஊழியர்கள் மட்டுமே அந்தக் கொள்கைக்குத் தகுதிபெறுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்