அணுவாயுதச் சோதனைகளின் தாக்கம் உலகளவில் இன்னும் உணரப்படுகிறது: அறிக்கை

2 mins read
4ecf2710-6f05-44d6-a56f-fa72b99ae8d1
‘நார்வீஜிய மக்கள் உதவி’ (என்பிஏ) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. - கோப்புப் படம்: atomicarchive.com
multi-img1 of 2

ஜெனிவா: அணுவாயுதச் சோதனைகள் உலகில் ஒவ்வொரு மனிதரையும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில் குறைந்தது நான்கு மில்லியன் மக்கள் புற்றுநோய் அல்லது மற்ற நோய்கள் காரணமாக முன்னரே இறக்கின்றனர். அணுவாயுதச் சோதனைகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன.

1945லிருந்து 2017ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 2,400க்கும் அதிகமான அணுவாயுதங்கள் சோதனைகளில் வெடிக்க வைக்கப்பட்டன.

ர‌ஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் வடகொரியா ஆகிய நாடுகளிடம் அணுவாயுதங்கள் இருக்கின்றன. இவற்றில் வடகொரியா மட்டும்தான் 90களிலுருந்து அணுவாயுதச் சோதனைகளை நடத்தி வருகிறது.

எனினும், முன்பு நடத்தப்பட்ட சோதனைகளின் தாக்கம் எவ்வாறு இன்னமும் உலகளவில் உணரப்படுகிறது என்பதை ‘நார்வீஜிய மக்கள் உதவி’ (என்பிஏ) எனும் மனிதாபிமான அமைப்பு வெளியிட்ட அறிக்கை விவரிக்கிறது. அந்த அறிக்கை பிரத்யேகமாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

எடுத்துக்காட்டாக, பிரெஞ்சு பொலினேசியா நாட்டைச் சேர்ந்த டஹீட்டி பகுதி அரசியல் தலைவர்களில் ஒருவரான ஹினாமோரா குரோஸ் எனும் 37 வயது மாது, தனது வீட்டுக்கு அருகே அணுவாயுதச் சோதனை நடத்தப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு லுக்கீமியா புற்றுநோய்க்கு ஆளானார்.

கடைசியாக 1996ஆம் ஆண்டு அவரின் வீட்டுக்கு அருகே அணுவாயுத வெடிப்பு ஏற்பட்டது. அப்போது அவருக்கு வயது ஏழு. மேலும், இதனால் அவரின் பாட்டி, தாய், இதர உறவினர் ஒருவர் ஆகியோர் ஏற்கெனவே தைராய்ட் புற்றுநோய்க்கு ஆளாயினர்.

மனிதச் சுகாதாரம், சமூகங்கள், உயிரியல் கட்டமைப்புகள் ஆகியவற்றுக்கு அணுவாயுத வெடிப்புகள், நீண்டகாலம் நீடிக்கக்கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

இந்த விவகாரம் தொடர்பில் இருந்துவரும் ரகசியத்தன்மை, அனைத்துலக அளவில் போதுமான தொடர்புகொள்ளும் நடவடிக்கைகள் இல்லாதது, போதுமான தகவல்கள் இல்லாதது ஆகியவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட பல சமூகங்கள் இன்னமும் பதில் கிடைக்காமல் இருப்பதை என்பிஏ வெளியிட்டுள்ள 304 பக்க அறிக்கை விளக்குகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வா‌ஷிங்டன் மறுபடியும் அணுவாயுதச் சோதனைகளை நடத்தக்கூடும் என்று கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து மறுபடியும் பேசப்பட்டு வருகிறது.

சீனாவும் ர‌ஷ்யாவும் ஏற்கெனவே அணுவாயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக திரு டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். சீனா, ர‌ஷ்யா இரண்டும் குற்றச்சாட்டுகளை மறுத்தன.

உலகளவில் முன்பு நடத்தப்பட்ட அணுவாயுதச் சோதனைகளுடன் தொடர்புடைய நோய்களுக்கு ஆளானோரில் நூறாயிரக்கணக்கனோர் ஏற்கெனவே மாண்டுவிட்டதாக என்பிஏ அறிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்