தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைதிக்கான நோபெல் பரிசுக்கு இம்ரான் கான் பெயர் பரிந்துரை

2 mins read
84a7743d-75d2-4bab-9cd3-c8de5c8c99a9
கடந்த 2023 ஆகஸ்ட்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். - படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தமது நாட்டில் மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் எடுத்த நடவடிக்கைகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2024 டிசம்பரில் தொடங்கப்பட்ட பாகிஸ்தான் உலகக் கூட்டணி (PWA) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் 72 வயது இம்ரான் கானின் பெயரை அதற்கு முன்மொழிந்துள்ளனர்.

அந்த அமைப்பு நார்வேயின் ‘பார்ட்டியட் சென்ட்ரம்’ என்ற அரசியல் கட்சியுடன் இணைக்கப்பட்ட ஒன்றாகும்.

தென்கிழக்காசியாவில் அமைதியைப் பரப்புவதற்காக எடுத்த முயற்சிகளுக்காகக் கடந்த 2019ஆம் ஆண்டிலும் இம்ரான் கானின் பெயர் அமைதிக்கான நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் நார்வே நோபெல் குழுவிற்கு நூற்றுக்கணக்கான பரிந்துரைகள் கிடைப்பதாகவும் எட்டு மாதகாலத் தீவிர, முழுமையான பரிசீலனைக்குப் பிறகு வெற்றியாளர் தேர்வுசெய்யப்படுவதாகவும் ‘தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ ஊடகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான தெஹ்ரீக் இ இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும் தலைவருமான இம்ரான் கான் கடந்த 2023 ஆகஸ்ட்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் ஊழலில் ஈடுபட்டதற்காகவும் இந்த ஆண்டு ஜனவரியில் அவருக்கு 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்காவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அரசுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளைத் திருடியது, அரசாங்க ரகசியங்களைக் கசியவிட்டது, சட்டவிரோதத் திருமணம் போன்ற வழக்குகளில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றங்கள் ரத்துசெய்தன அல்லது நிறுத்திவைத்தன.

கடந்த 2022 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோற்றுப்போனார்.

தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கும் இம்ரான் கான், அவை அரசியல் நோக்கத்துடன் சுமத்தப்பட்டவை என்றும் கூறிவருகிறார்.

குறிப்புச் சொற்கள்