இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
நில ஊழல் வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 17) ராவல்பிண்டி நகரில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ராவல்பிண்டி சிறையில் இம்ரான் கான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான 72 வயது இம்ரான் கான் மீதும் அவரது மனைவி மீதும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டது.
2018ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தபோது சொத்து மேம்பாட்டாளர் ஒருவர் அவருக்கு லஞ்சமாக நிலம் ஒன்றைப் பரிசளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கானும் அவரது மனைவி புஷ்ரா பிபியும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.
பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த புஷ்ரா பிபி, பிறகு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகப் பாகிஸ்தானிய ஊடகம் தெரிவித்தது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்த அவரது ஆதரவாளர்கள் பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர்.

