தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்ட மறுப்பு இயக்கம் நடத்தப்போவதாக இம்ரான் கான் எச்சரிக்கை

2 mins read
8fddf834-23e4-4992-af17-cbf35775042b
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமாபாத்: சிறையிலிருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடுத்த வாரம் பேரணி நடத்த தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியால் ஆளப்படும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் டிசம்பர் 13 அன்று ஒன்றுகூடுமாறு ஆதரவாளர்களை வியாழக்கிழமை (டிசம்பர் 5) எக்ஸ் தளப் பதிவில் அவர் கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 25ஆம் தேதி இடம்பெற்ற எதிர்ப்புப் பேரணி மீதான ஒடுக்குமுறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரினார். அதில் குறைந்தது தமது 12 ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு மே 9 தேதி இடம்பெற்ற வன்முறையில் எண்மர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் ஊழியர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

“இந்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாவிட்டால், டிசம்பர் 14 முதல்  சட்ட மறுப்பு இயக்கம் (Civil disobedience movement) தொடங்கும். விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.

நவம்பர் 25 எதிர்ப்பு அணிவகுப்பின்போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் மறுக்கிறது. அத்துடன், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு மே 9 அன்று ராணுவ நிலைகளைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

மே 9 தாக்குதல்களை வழிநடத்திய குற்றச்சாட்டின் பேரில் இம்ரான் கான் மீது டிசம்பர் 5ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது. அவர் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து சிறையில் இருக்கும் 72 வயதான முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரத்திற்கு எதிரான பல வழக்குகளில் இது அண்மைய குற்றச்சாட்டாகும்.

அவரை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதற்காக இந்த வழக்குகள் கற்பனையாக உருவாக்கப்பட்டவை என்று அவரும் அவரது கட்சியினரும் கூறுகின்றனர். ராணுவம் அதை மறுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்