லண்டன்: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உயிருக்கு சிறையில் ஆபத்து இருப்பதாக அவரின் மகன்கள் கூறியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) உணர்ச்சிபூர்வமான செய்தியாளர் சந்திப்பின்போது அவர்கள் அவ்வாறு கூறினர். சிறையில் தந்தையைச் சந்திப்பதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“எனக்குத் தெரிந்தவரை எனது தந்தைதான் ஆக திடமானவர். ஆனால், அவருக்கு 73 வயதாகிவிட்டது. அவர் நடத்தப்பட்ட விதத்தால் அவரின் உடல் பாதிக்கப்பட்டுள்ளது,” என்று இம்ரான் கானின் மகன் கசிம் கான் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனிலிருந்து ஸூம் தளத்தின்வழி கூறினார்.
“தற்போதைய நிலவரப்படி அவரால் சிறைவாசத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது என்பதுபோல் தெரிகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இம்ரான் கான் நடத்தப்பட்ட விதத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் குரல் கொடுக்குமாறு பாகிஸ்தானுக்கு நெருக்குதல் அளிக்கவேண்டும் என்று கசிமும் அவரின் சகோதரரும் அனைத்துலகச் சமூகத்தைக் கேட்டுக்கொண்டனர். மூவாண்டுகளாக சிறையில் இருந்தாலும் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான இம்ரான் கான் தொடர்ந்து பாகிஸ்தானின் ஆகப் பிரபலமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
கானின் உடல்நிலை குறித்த கவலைகள் தலைதூக்கியதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக அவர்மீதான கவனம் அதிகரித்துள்ளது.


