லாகூர்: சிறையிலடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கானை லாகூரில் உள்ள அவரது வீட்டில் காவல்துறை கைது செய்தது.
செப்டம்பர் 27ஆம் தேதி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள வேளையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பஞ்சாப் மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) தெரிவித்தார்.
அலீமா கைது செய்யப்பட்டு 30 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக லாகூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
உளவுத்துறை அறிக்கைகளின்படி, அலீமா எந்தவொரு பொது இடத்திலும் இருப்பது பொதுமக்களின் பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று லாகூர் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டது.
சிறையிலுள்ள இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யக் கோரி அவரது கட்சி அடுத்த வாரம் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
அந்தப் பேரணியைத் தடுக்க அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி சனிக்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், அலீமா கைது செய்யப்பட்டுள்ளதை இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் சுல்ஃபி புகாரி ‘மிகவும் கேவலமானது’ என்று வர்ணித்துள்ளார். மேலும், செப்டம்பர் 27 பேரணி குறித்த அச்சமே அரசாங்கத்தைப் பிடித்துள்ளதாக அவர் கூறினார்.
