பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத் தலைநகர் ஷா அலாமில் நடந்த தன்முனைப்புப் பேச்சு நிகழ்ச்சி ஒன்றில் தகாத நடவடிக்கைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதன் தொடர்பில் தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டுக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அச்சம்பவம் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்ததாக ஷா அலாம் காவல்துறைத் தலைவர் முகம்மது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் அதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.
“வாக்குமூலம் பதிவுசெய்ய புகார் கொடுத்தவரின் மனைவி, நிகழச்சியில் கலந்துகொண்ட மற்றவர்கள் ஆகியோரை அழைத்துள்ளோம்.
“முடிவெடுப்பதற்கு முன்பு பல தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும். காவல்துறை அல்லது மாநில சமயப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்று முடிவெடுப்பதும் அதில் அடங்கும்,” என்று அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட தன்முனைப்புப் பேச்சு நிகழ்ச்சியில் அரை நிர்வாணமாக நடனமாடுவது, ‘ஆத்மாவைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள்’ (holy cleansing baths) போன்றவை இடம்பெற்றதாகக் கூறப்படுவது குறித்து தாங்கள் விசாரணையைத் தொடங்கியிருப்பதாக மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுப் பிரிவு (ஜாக்கிம்) முன்னதாக அறிக்கையில் தெரிவித்தது.
இந்த விவகாரம் முக்கியமானதாகக் கருதப்பட வேண்டும் என்று சிலாங்கூர் முதலமைச்சர் அமிருதீன் ஷாரி சனிக்கிழமை (ஜூலை 12) கூறினார். முழு விசாரணையில் தகாத நடவடிக்கைகள் இடம்பெற்றது உறுதிப்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அறிக்கை கிடைத்துவிட்டது. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்குத் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்டதாலும் அதற்கும் மாநில அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததாலும், விசாரணை நடத்திக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு நான் ஜாய்ஸ் அமைப்பிடம் (சிலாங்கூர் இஸ்லாமிய சமயப் பிரிவு) கேட்டுக்கொண்டுள்ளேன்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
“... அதேவேளை, வெளிவந்த தகவல்கள் எனக்குக் கவலை அளிக்கின்றன. முழுமையாக விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் அவர் எடுத்துரைத்தார்.