கனடா: கூட்டத்துக்குள் காரைச் செலுத்திய ஆடவர்மீது கொலைக் குற்றச்சாட்டு

கனடா: கூட்டத்துக்குள் காரைச் செலுத்திய ஆடவர்மீது கொலைக் குற்றச்சாட்டு

படம்: ஏஎஃப்பி

28 Apr 2025 - 5:44 pm

2 mins read

வான்கூவர்: கனடாவின் வான்கூவர் நகரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) கார் ஒன்றை கூட்டத்துக்குள் செலுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 30 வயது ஆடவர் ஒருவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஃபிலிப்பினோ வீதிக் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த இச்சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

வான்கூவரைச் சேர்ந்த காய் ஜி ஆடம் லோமீது இரண்டாம் நிலை கொலை தொடர்பில் எட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக வான்கூவர் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) தெரிவித்தது.

தடுப்புக்காவலுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட லோ, வேண்டுமென்றே கூட்டத்தின்மீது காரை மோதியதாகவும் அவருக்கு ஏற்கெனவே மனநலப் பிரச்சினை இருந்ததாகவும் காவல்துறை கூறியது.

இச்சம்பவத்துக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், இதற்கும் பயங்கரவாதத்துக்கும் தொடர்பில்லை எனக் காவல்துறை சொன்னது.

அந்த ஆடவர் கறுப்பு நிற ஆவ்டி காரை ஓட்டியதாகக் காவல்துறைத் தலைவர் ஸ்டீவ் ராய் கூறினார். அந்த ஆடவருக்குக் காவல்துறையுடனும் மனநல நிபுணர்களுடனும் தொடர்பு இருந்தது.

ஆண்டுதோறும் நடைபெறும் ‘லப்பு லப்பு’ நிகழ்ச்சியின்போது பாதசாரிகள்மீது கார் மோதியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. ‘லப்பு லப்பு’, பிலிப்பீன்ஸ் கலாசாரத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியாகும்.

காலனித்துவ ஆட்சியை எதிர்த்த 16ஆம் நூற்றாண்டு பிலிப்பீன்ஸ் தலைவர் ஒருவரைக் கொண்டாடும் ‘லப்பு லப்பு’, ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவுள்ள கனடியப் பொதுத் தேர்தலுக்கு முந்தைய வாரயிறுதியில் வந்தது.

இந்நிலையில், இத்துயரச் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடம் கனடியப் பிரதமர் மார்க் கார்னி தொலைக்காட்சியில் பேசியபோது கண்ணீர் வடித்தார்.

“கடந்த இரவு குடும்பங்கள் சகோதரி, சகோதரர், தாயார், தந்தை, மகன் அல்லது மகளை இழந்தனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் நடக்கக்கூடாத ஒன்று அவற்றுக்கு நடந்துவிட்டது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
கனடாகுற்றச்சாட்டுகாவல்துறை