கோலாலம்பூர்: மலேசியாவின் அனைத்துப் பேருந்துகளில் மூன்று துளைகொண்ட மின் இணைப்புகளுக்கும் யுஎஸ்பி முனைகளுக்கும் போக்குவரத்து அமைச்சு தடை விதித்துள்ளது.
பேருந்தில் மின்சாரம் பாய்ந்து இளையர் மரணமடைந்த சம்பவத்தில் பாதுகாப்புத் தரம் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.
தவறான மின் இணைப்புகளால் 18 வயது இளையர் மரணமடைந்ததாக நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, பேருந்தின் மின் இணைப்புகளிலும் மற்றும் உபகரணங்களிலும் பல முக்கிய குறைபாடுகளைக் கண்டறிந்து உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மின்விநியோகத்திலிருந்து மின்னூட்ட முனைக்கு மாற்றி இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. பேருந்தில் பயன்படுத்தப்பட்ட மின் சாதனங்கள் தரமானவை அல்ல என்று பணிக்குழு தெரிவித்ததாக அவர் கூறினார்.
அதோடு மின்கம்பி இணைப்புகள் உரிமம் இல்லாதவரால் செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி ஆணையத்தின் வழிகாட்டல் இதில் மீறப்பட்டது என்றும் பணிக்குழு மேலும் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முதல் நடவடிக்கையாக கொன்சார்டியம் பஸ் எக்ஸ்பிரஸ் செமானான்ஜங் நிறுவனத்துக்கு நவம்பர் 4ஆம் தேதி முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், நவம்பர் 6ஆம் தேதியிலிருந்து மூன்று துளை கொண்ட மின்சார முனைகளைப் பயன்படுத்த அனைத்துப் பேருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
பினாங்கு சென்ட்ரலில் நவம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணிவாக்கில் விரைவுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த 18 வயது இளையர் சுயநினைவின்றிக் காணப்பட்டார்.
அந்த இளையர் பேருந்தில் கைப்பேசியை மின்னூட்டம் செய்தபோது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததை அடுத்து, அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.