சிரியா மக்கள் வழிநடத்தும் அனைவரையும் உள்ளடக்கும் அரசியல் செயல்பாடே அந்நாட்டில் நிலவும் குழப்பத்துக்கு ஒரே தீர்வு என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
சிரியாவில் 2011ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் 300,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டதாகவும் வெளியுறவு அமைச்சு புதன்கிழமையன்று அறிக்கை மூலம் தெரிவித்தது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பலர் மற்ற நாடுகளில் அடைக்கலம் நாடினர்.
சிரியாவில் உள்ள நிலவரத்தை சிங்கப்பூர் அணுக்கமாகக் கவனித்து வருவதாகவும் அமைதி திரும்பியவுடன் அகதிகள் பாதுகாப்பாகத் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவர் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
“சிரியாவின் சுதந்திரம், நாடு என்ற அதன் நிலைப்பாட்டுக்கு இருக்கும் மரியாதை, அதன் சுய ஆளுமை உரிமை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டுதான் ஆக்ககரமான அரசியல் தீர்வைக் கொண்டுவர முடியும்.
“வெளிநாட்டுத் தரப்புகள், தங்களின் உத்திபூர்வ இலக்குகளை அடைய சிரியாவின் சமூகத்தில் காணப்படும் விரிசல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது,” என்றும் அவர் சுட்டினார்.
ஏற்கெனவே பெரிய அளவில் அவதிப்பட்டுள்ள சிரியா மக்களின் பாதுகாப்பையும் நலனையும் அனைத்துத் தரப்புகளும் உறுதிசெய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

