கோலாலம்பூர்: மலேசியாவில் வருமான ஏற்றத்தாழ்வு தொடர்ந்து குறைந்துவருவதாக அந்நாட்டுப் பொருளியல் துணையமைச்சர் முகமது ஷாகர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பல்வேறு பொருளியல் குறியீடுகளின் அடிப்படையில் நாட்டின் வருமான விநியோக இடைவெளி குறையும் தகவலை அவர் எடுத்துரைத்தார்.
குடும்பங்களின் வருமான, செலவினக் கருத்தாய்வு அறிக்கை 2024ல் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்கள், 2024ஆம் ஆண்டில் வருமான ஏற்றத்தாழ்வை மதிப்பிடும் ‘ஜினி’ அளவீடு (Gini coefficient) மேம்பட்டிருப்பதைக் காட்டுவதாகத் திரு முகமது ஷகார் கூறினார்.
வருமான இடைவெளியைக் மதிப்பிடும் ‘ஜினி’ அளவீடு பூஜ்ஜியமாக இருந்தால் முழுமையான வருமானச் சமநிலை இருப்பதாகவும் ஒன்று என்றால் முழுமையான ஏற்றத்தாழ்வு நிலவுவதாகவும் பொருள்படும்.
2024ஆம் ஆண்டு அந்த அளவீடு 0.390 புள்ளியாகப் பதிவானது. ஒப்புநோக்க 2022ல் அது 0.404ஆக இருந்தது.
வருமான இடைவெளி குறைந்துவரும் போக்கை இது காட்டுகிறது என்று நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 5) இடம்பெற்ற கேள்வி-பதில் நேரத்தில் பேசியபோது துணையமைச்சர் முகமது ஷகார் கூறினார்.
பாரம்பரிய நடைமுறைகளுக்கு அப்பால் வருமான ஏற்றத்தாழ்வைக் கையாளும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து வாங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
வெவ்வேறு வருமானப் பிரிவினரிடையே வருமான ஏற்றத்தாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகத் துணையமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
‘தேய்ல்’ குறியீட்டின் அடிப்படையில் குடும்பங்களின் மொத்த வருமானம் 2024ஆம் ஆண்டில் சரிவடைந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், அட்கின்சன் குறியீட்டைப் பயன்படுத்தி வருமான இடைவெளி தொடர்பிலான சமூகத்தின், குறிப்பாக குறைந்த வருமானக் குடும்பங்களின் உணர்திறனை அரசாங்கம் மதிப்பிட்டதாக அவர் சொன்னார்.
இவ்வாறு பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு, இன, மாநில வாரியாக மிகத் துல்லியமான தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு உதவியதாக திரு முகமது ஷகார் குறிப்பிட்டார்.

