அமெரிக்க மாநிலங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் அதிகரிப்பு: ஆய்வு

அமெரிக்க மாநிலங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் அதிகரிப்பு: ஆய்வு

2 mins read
e9c9add4-48b2-4e68-ac00-cc73fd01ee77
கருக்கலைப்புத் தடை நடப்பில் உள்ள 13 மாநிலங்களில், கடந்த ஆண்டு (2025) ஏறக்குறைய 91,000 பெண்கள், கருக்கலைப்பு மாத்திரைகளைத் தொலைச் சுகாதாரச் சேவை மூலம் பெற்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் பெண்கள், கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்க மற்ற மாநிலங்களுக்குச் செல்வதற்குப் பதிலாகத் தொலைச் சுகாதாரச் சேவை மூலம் அவற்றைப் பெறுவதாக ஆய்வொன்று கூறுகிறது.

குட்மாக்கர் கல்வி நிலையம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் கருக்கலைப்புத் தடை 13 மாநிலங்களில் நடப்பில் உள்ளது. கடந்த ஆண்டு (2025) அந்த மாநிலங்களில் வசிக்கும் ஏறக்குறைய 91,000 பெண்கள், கருக்கலைப்பு மாத்திரைகளைத் தொலைச் சுகாதாரச் சேவை மூலம் பெற்றனர்.

அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை 25 விழுக்காட்டுக்கும் அதிகம். 2024ல் 72,000 பேர் கருக்கலைப்பு மாத்திரைகளை அனுப்புமாறு கோரியிருந்தனர்.

அதே நேரம், கருக்கலைப்புத் தடை நடப்பில் உள்ள மாநிலங்களிலிருந்து மற்ற மாநிலங்களுக்குச் சென்ற மகளிரின் எண்ணிக்கை 2024ல் 74,000ஆக இருந்தது. அது கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 62,000க்குக் குறைந்தது.

கருவைக் கலைப்பதற்காக மற்ற மாநிலங்களுக்குச் சென்றோரின் எண்ணிக்கையும் சரிந்தது. அது போன ஆண்டில் 142,000ஆக இருந்தது. அது 2024ல் பதிவான 170,000 பெண்களைவிடக் குறைவு. 2023ல் அந்த எண்ணிக்கை 154,000ஆக இருந்தது.

“முழுமையாகத் தடைசெய்யப்பட்ட மாநிலங்களில் வசிப்போர், கருக்கலைப்புத் தொடர்பான பராமரிப்புச் சேவைகளை அணுகும் விதத்தில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிருப்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அத்தகைய சேவைகளைப் பெற முன்பைவிட இப்போது குறைவானவர்களே மாநிலங்களைவிட்டு வெளியே செல்கின்றனர். அதிகமானோர், தொலைச் சுகாதாரச் சேவையை நாடுகின்றனர்,” என்று அறிக்கையை எழுதிய திரு ஐசக் மேடோ-ஸிமெட்டும் திருவாட்டி கிம்யா ஃபொரூஸானும் குறிப்பிட்டனர்.

கருக்கலைப்பு, சட்டவிரோதமாக இருக்கும் மாநிலங்களின் சட்ட நடவடிக்கைகளிலிருந்து மருத்துவர்களைப் பாதுகாக்கும் சட்டங்களே அத்தகைய போக்கிற்குக் காரணம் என்று அறிக்கை சுட்டியது.

கலிபோர்னியா, கொலராடோ, மாசசூசெட்ஸ், மெய்ன், நியூயார்க், ரோட் ஐலண்ட், வெர்மோன்ட், வாஷிங்டன் ஆகிய மாநிலங்களில் அந்தச் சட்டம் நடப்பில் உள்ளது.

அமெரிக்கா முழுதும், கருக்கலைப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 1.12 மில்லியனுக்கும் கூடுதலாக இருந்தது. அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதில் பெரிய மாற்றமில்லை. ஆனால் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு அதுவே ஆக அதிகம்.

குறிப்புச் சொற்கள்