புகைமூட்டம் காரணமாக மலேசியாவில் ஆஸ்துமா பாதிப்பு அதிகரிப்பு

புகைமூட்டம் காரணமாக மலேசியாவில் ஆஸ்துமா பாதிப்பு அதிகரிப்பு

படம்: பெர்னாமா

24 Aug 2026 - 9:47 am

2 mins read

கோலா சிலாங்கூர்: மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடுமையான புகைமூட்டத்துக்கு இடையே, அண்மைய தொற்றுநோயியல் வாரத்தில் ஆஸ்துமா பாதிப்பு 259 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் முதன்மை கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின்படி, தொற்றுநோயியல் வாரம் 32ல் 61ஆக இருந்த ஆஸ்துமா சம்பவங்களின் எண்ணிக்கை வாரம் 33ல் 219ஆக உயர்ந்துள்ளது.

இதே காலகட்டத்தில், மேல் சுவாசப் பாதை தொற்று நோய்கள் 124 விழுக்காடு அதிகரித்து 1,637லிருந்து 3,674ஆக உயர்ந்துள்ளன.

இருப்பினும், கண் விழிப்படல அழற்சி பாதிப்புகள் ஏழு விழுக்காடு குறைந்து 157லிருந்து 146ஆக பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, ஏழு பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டைப் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சரவாக்கில் உள்ள செரியான் பகுதி ஆக அதிகமாக 197 குறியீட்டைப் பதிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கூச்சிங் 185, ஸ்ரீ அமான் 178, சமரஹான் 176 மற்றும் சரிக்கே 128 ஆகிய அளவுகளைப் பதிவு செய்துள்ளன.

மேலும் கெடாவில் உள்ள சுங்கை பட்டாணி மற்றும் பேராக்கில் உள்ள தைப்பிங் ஆகிய இரு இடங்களிலும் 126 என்ற அளவில் காற்றுத் தூய்மைக்கேடு பதிவாகியுள்ளது.

பொதுவாக, காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் ஆரோக்கியமற்ற நிலை என்றும் 201 முதல் 300 வரை இருந்தால் மிகவும் ஆரோக்கியமற்ற நிலை என்றும் 300க்கு மேல் பதிவானால் அபாயகரமானது என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறும் மலேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்கள் உட்பட 90 பேர் இதுவரை வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 71 வெப்பத் தளர்ச்சி சம்பவங்களும் 14 வெப்ப வாதச் சம்பவங்களும் ஐந்து தசைப்பிடிப்புச் சம்பவங்களும் அடங்கும்.

வாரம் 33ல் மட்டும் விளையாட்டு வீரர் தொடர்பான ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சிகிச்சை முடிந்து மீண்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் மருத்துவக் குழுவினர் அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபுகைமூட்டம்நோய்பாதிப்புவெப்பம்