ஹொக்காய்டோ: ஜப்பானின் நகரப்புறங்களில், மக்கள் வாழும் பகுதிகளில் கரடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது, கரடிகளால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகம் பதிவாகின்றன.
கடந்த ஜூலை மாதம் இவாட்டே, ஹொகாய்டோ மாநிலங்களில் கரடிகள் தாக்கி இருவர் மாண்டனர். ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து வருவதாலும் பல பண்ணைகள் காலியாகக் கிடப்பதாலும் அவ்விடங்களில் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்கள் வசிக்கும் இடங்களுக்கும் கரடிகள் நுழைவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 12 அதிகாலை, செய்தித்தாள் விநியோகித்துக்கொண்டிருந்த 52 வயது ஆடவரைக் கரடி ஒன்று தாக்கிக் கொன்றது. அப்பகுதியின் நகராட்சி அலுவலகத்திலிருந்து 700 மீட்டர் தூரத்தில் அந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.
அந்த ஆடவரைக் கரடி புல்வெளிக்கு இழுத்துச் சென்றது. அவரது உடல் பிறகு கண்டெடுக்கப்பட்டது.
அருகில் உள்ள பேரங்காடிக்குச் சொந்தமான குப்பை வீசும் இடத்தையும் அக்கரடி சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஹொக்காய்டோவில் கரடி தாக்கி ஒருவர் மாண்டது இதுவே முதல் முறையாகும்.
அந்த ஆண் கரடிக்கு எட்டு முதல் ஒன்பது வயது இருக்கும் என்றும் அதன் உயரம் 208 சென்டிமீட்டர், எடை 218 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அக்கரடியை ஜூலை 18ஆம் தேதியன்று வேடர்கள் கொன்றனர்.