ஜப்பானில் ‘எச்எஃப்எம்டி’ சம்பவங்கள் அதிகரிப்பு

2 mins read
88163119-9dd9-4722-9f95-f5712b9eda72
பொதுவாக, இரண்டு வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளிடையே அந்த நோயைக் காணமுடிகிறது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பான் முழுதும் கை, கால், வாய்ப் புண் நோய்ச் (எச்எஃப்எம்டி) சம்பவங்கள் குறித்து புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

பிறருக்குப் பரவக்கூடிய அந்த நோயால் பாதிக்கப்படுவோரின் கைகள், கால்கள், வாயில் தோல் அழற்சி ஏற்படும். தும்மும்போதோ இருமும்போதோ காற்றில் கலந்திடும் நீர்த் துளிகள் மூலம் அந்த நோய் பரவுகிறது.

அதோடு, அக்கிருமியால் பாதிக்கப்படும் கைகளைக் கொண்டு கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றைத் தொடுவதன் மூலமும் நோய் பரவக்கூடும்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிலையங்களில், அக்டோபர் 7ஆம் தேதிக்கும் அக்டோபர் 13ஆம் தேதிக்கும் இடையே, ஒவ்வொரு நிலையத்திலும் சராசரியாக 10.78 ‘எச்எஃப்எம்டி’ சம்பவங்கள் பதிவானதாக ஜப்பானின் தேசிய தொற்றுநோய்க் கழகம் தெரிவித்தது.

இது, தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக ஜப்பானிய நாளேடான ‘அசாஹி ஷிம்புன்’ கூறியது.

கடந்த பத்தாண்டில், இந்தக் காலகட்டத்தில் பதிவாகியுள்ள ஆக உயர்வான எண்ணிக்கை இது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், ‘இஹிமெ’ பகுதியில் ஆக அதிக சராசரி எண்ணிக்கை பதிவானது. அங்கு, ஒவ்வொரு மருத்துவ நிலையத்திலும் 28.25 நோயாளிகள் அந்நோயால் பாதிக்கப்பட்டனர்.

அதற்கு அடுத்தபடியாக 26.61 நோயாளிகளுடன் உள்ளது, ‘யமாகாட்டா’ பகுதி.

ஜப்பானின் 47 பகுதிகளில், 41 எச்சரிக்கை நிலையைத் தாண்டியுள்ளன.

‘எச்எஃப்எம்டி’ நோய், காய்ச்சலை ஏற்படுத்தும். அரிய நேரங்களில், மூளையில் வீக்கம் ஏற்படக்கூடும். ‘எச்எஃப்எம்டி’ நோய்க்குக் குறிப்பிட்ட சிகிச்சை முறை இல்லாவிட்டாலும், மூன்று முதல் ஏழு நாள்களுக்குள் பெரும்பாலானோர் குணமடைந்துவிடுவர்.

குறிப்புச் சொற்கள்