கோலாலம்பூர்: மலேசியாவில் 2023 முதல் 2025 வரை போதைப்பொருள் தொடர்பில் 242,075 குற்றங்கள் பதிவாயின; 306,230 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் ஆண்டுக்காண்டு கூடிவருவதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாகப் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பில் 2023ல் 73,345 குற்றச் செயல்கள் பதிவாயின. அந்த எண்ணிக்கை 2024ல் 81,090ஆகவும் 2025ல் 87,645ஆகவும் அதிகரித்தது.
அதுபோல, கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் கூடியது.
“போதைப்பொருள் புழங்கியது தொடர்பில் 2023ல் 94,799 பேர் கைதுசெய்யப்பட்டனர். அந்த எண்ணிக்கை 2024ல் 102,201ஆகவும் 2025ல் 109,230ஆகவும் அதிகரித்தது,” என்று திரு ஹுசைன் தெரிவித்தார்.
“போதைப்பொருள் கடத்துவதும் அதனை வைத்திருப்பதும் அதிகரித்து வருகிறது. மெத்தம்ஃபெட்டமைன், கெட்டமின், எம்டிஎம்ஏ, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தேசிய போதைப்பொருள் கொள்கையானது, குற்றம் நடந்தபின் நடவடிக்கை எடுப்பதிலிருந்து, விரிவான தடுப்பு உத்தியை நோக்கி நகரும் என்றும் அவர் சொன்னார்.
“போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், கடத்தல்காரர்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும். அதே வேளையில், கல்வி, சமூக ஈடுபாடு, சமய நிறுவனங்கள் மூலம் அடித்தள அளவில் தடுப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும்,” என்று திரு ஹுசைன் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
“புதிதாக ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகும்போது, அதனைத் தடுப்பதற்கான முயற்சி தோற்றுப் போகிறது. அதனால், இந்த அணுகுமுறை முக்கியமானது,” என்றார் அவர்.
போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பது, அவற்றை விநியோகிக்கும் கும்பல்களை முறியடிப்பது, எதிர்காலத் தலைமுறையை போதைக்கு அடிமையாவதில் இருந்தும் குற்றங்களிலிருந்தும் காப்பது ஆகியவையே போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இலக்கு என்று திரு ஹுசைன் கூறினார்.

