ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் வீட்டு விற்பனை இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் அதிகரித்து.
அம்மாநிலத்தில் வீடு வாங்குவதில் காணப்படும் ஆர்வம், வெகு விரைவில் இடம்பெற்ற பொருளியல் வளர்ச்சி ஆகியவை அதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகக் காணப்பட்ட சரிவைத் தொடர்ந்து வீட்டுச் சந்தை ஒருவழியாக மீண்டு வந்துள்ளது,” என்று ஜோகூர் தலைநகர் ஜோகூர் பாருவில் செயல்படும் சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனமான ஆலிவ் டிரீ பிராப்பர்ட்டியின் (Olive Tree Property) நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான சாமுவெல் டான் குறிப்பிட்டார்.
ஜோகூர் மாநிலத்தில் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 3,030ஆக இருந்தது என்று மலேசியாவின் தேசிய சொத்துச் சந்தை தகவல் நிலையத்தின் (Napic) ஆக அண்மைய புள்ளி விவரங்களில் தெரிய வந்தது. அந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு மூன்றாம் காலாண்டில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 33 விழுக்காடு குறைவாகும்.
ஆக அண்மைய புள்ளி விவரங்களின்படி அதிகம் விற்கப்படாத வீடுகளைக் கொண்டுள்ள பகுதிகள் பட்டியலில் கோலாலம்பூர், வட பேராக் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ஜோகூர் மூன்றாது நிலையில் உள்ளது. சென்ற ஆண்டு இதே பட்டியலில் ஜோகூர் ஆக அதிகமான விற்கப்படாத வீடுகளைக் கொண்டிருக்கும் பகுதியாக முதலிடத்தில் இருந்தது.
எனினும், இந்த முன்னேற்றம் குறித்து உடனடியாக மகிழ்ச்சியடைந்துவிட முடியாது என்று கவனிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர். தேசிய அளவில் ஆக அதிகமான வீற்கப்படாத வீடுகளைக் கொண்டுள்ள பகுதிகளில் ஒன்றாக ஜோகூர் தொடர்ந்து இருந்து வருவது அதற்குக் காரணம் என்று அவர்கள் சுட்டினர்.
கடந்த ஐந்தாண்டுகளில் ஆக அதிக எண்ணிக்கையில் புதிய வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ள மாநிலங்களில் ஜோகூரும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்கு முன்பு 2019ஆம் ஆண்டில் அம்மாநிலத்தில் 9,711 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. 2023 ஆண்டிறுதிக்குள் அந்த எண்ணிக்கை 12,390க்கு அதிகரித்தது.
சொத்து மேம்பாட்டாளர்கள் நிலைமையை சரியாகக் கையாளாவிட்டால் தேவைக்கும் அதிகமான வீடுகள் விற்பனைக்கு விடப்படக்கூடும் என்று திரு டான் எச்சரித்துள்ளார்.