தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பினாங்கில் சளிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

2 mins read
e2f4d3fc-41c4-4752-a731-645975809d63
குறைந்தது ஒரு நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அரசாங்க சுகாதார நிலையங்களில் சளிக்காய்ச்சல் தடுப்பூசி இலவசமாகப் போடப்படுவதைப் பினாங்கு சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கூய் சுட்டினார். - படம்: ஏஎஃப்பி

ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் சளிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இத்தகவலை அம்மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 கிருமித்தொற்றைப் போல் கடுமையானதல்ல என்றபோதிலும் சளிக்காய்ச்சலுக்குக் காரணமான கிருமிப் பரவலை உன்னிப்பாகக் கண்காணிப்பது அவசியம் என்று பினாங்கு சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கூய் தெரிவித்தார்.

“பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளின் உடல்நலத்தை அவர்கள் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

“உடல்நலம் சரியில்லாதவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்,” என்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுகாதார நிகழ்வு ஒன்றில் செய்தியாளர்களிடம் திரு கூய் தெரிவித்தார்.

மலேசியாவிலேயே சிலாங்கூர் மாநிலத்தில் ஆக மோசமான சளிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தலைநகர் கோலாலம்பூர், புத்ராஜெயா, பினாங்கு, ஜோகூர், கெடா ஆகிய இடங்களிலும் பலர் சளிக்காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

இந்நிலையை எதிர்கொள்ள தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருமும்போதும் அல்லது தும்மும்போதும் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்வது, உடல்நலம் சரியில்லாதபோது கூட்டமான இடங்களைத் தவிர்ப்பது ஆகியவை நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்று நினைவூட்டப்பட்டுள்ளது.

பினாங்கில் சளிக்காய்ச்சல் பாதிப்பு ஆண்டிறுதியில் அதிகரிப்பது வழக்கம் என்று திரு கூய் எச்சரிக்கை விடுத்தார்.

கிருமி நாசினி திரவம் அல்லது சவர்க்காரத்தைப் பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவுவது மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், சளிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் நன்மை பயக்கும் என்றார் அவர்.

குறைந்தது ஒரு நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அரசாங்க சுகாதார நிலையங்களில் சளிக்காய்ச்சல் தடுப்பூசி இலவசமாகப் போடப்படுவதை அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்