ஜெனிவா: குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதற்காக் கடத்தப்படும் மனிதர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் புதன்கிழமை (ஜூலை 30) தெரிவித்துள்ளது.
அவ்வாறு கடத்தப்படும் பல்லாயிரக்கணக்கானோர் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள மோசடி நிலையங்களில் சிக்கியுள்ளதாக நிறுவனம் சொன்னது.
பெரும்பாலான நேரங்களில் கடத்தப்படுவோர் உதவி பெறுவதற்குப் பதிலாக கட்டாயத்தின் பேரில் செய்த குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்படுகின்றனர் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் இடம்பெயர்தல் அமைப்பின் தலைவர் திருவாட்டி ஏமி போப் கூறினார்.
“மனிதர்களைக் கடத்துவது மனித உரிமைகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி. அது ஊழலை மேலும் தூண்டிவிடும் மிகப்பெரிய அனைத்துலக வர்த்தகமாக உள்ளது. அது அச்சத்தைப் பரப்பி எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை வேட்டையாடுகிறது,” என்று திருவாட்டி போப் சாடினார்.
தற்போது, தென்கிழக்காசியாவில் பல்லாயிரக்கணக்கானோர் இணைய மோசடி நிலையங்களில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அத்தகைய நடவடிக்கைகள் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட $40 பில்லியன் டாலரை ஈட்டுகின்றன. மோசடி நிலையங்களில் சிக்கியுள்ளோரில் பெரும்பாலோர் வெளிநாட்டு ஊழியர்கள், வேலை தேடும் இளையர்கள், பிள்ளைகள், உடற்குறையுள்ளோர்,” என்று திருவாட்டி போப் சுட்டினார்.
2022ஆம் ஆண்டு, இடம்பெயர்வோருக்கான தமது அமைப்பு, கடத்தப்பட்ட சுமார் 3,000 பேருக்கு உதவியதையும் அவர் குறிப்பிட்டார்.
பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளில் சிக்கிக்கொண்டோர் வீடு திரும்ப உதவியதோடு தாய்லாந்து, மியன்மார் போன்ற பல நாடுகளில் பாதிக்கப்பட்டோருக்கு அமைப்பு ஆதரவளித்தது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் இன்னும் அதிகமானோர் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர் என்று திருவாட்டி போப் எச்சரித்தார்.
“நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் அத்தகையோர் உதவி பெறுவதற்குப் பதிலாகக் கைதுசெய்யப்படுகின்றனர், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர், தண்டிக்கப்படுகின்றனர். யாரும் கட்டாயத்தின் பேரில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காகத் தண்டிக்கப்படக்கூடாது,” என்று திருவாட்டி போப் வலியுறுத்தினார்.
கடத்தப்பட்டோரைத் தண்டிப்பதற்குப் பதிலாக அத்தகையோரைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துலகச் சட்டங்களை மாற்றி அமைப்பதற்கு அரசாங்கங்களும் குடிமை அமைப்புகளும் முயலவேண்டும் என்று திருவாட்டி போப் கேட்டுக்கொண்டார்.