வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க ராணுவம் உள்ளது.
அமெரிக்க ராணுவம் கப்பல்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் தருவதாலும் பயணத்தின்போது இடையூறு ஏதும் இல்லாமல் இருக்க உதவிகள் வழங்குவதாலும் அது சாத்தியமாகிறது.
இதனால் கப்பல் நிறுவன உரிமையாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். வரும் நாள்களில் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சூடுபிடிக்கும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு கப்பல் நிறுவனங்களும் செய்தி நிறுவனங்களிடம் பேசியுள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் எப்படி பயணம் செய்வது என்பது குறித்து அமெரிக்க ராணுவம் உதவி வருவதாக அவை தெரிவித்தன.
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க ராணுவம் அறிவுரைகள் மட்டுமே தருகிறது, கப்பல்களைப் பாதுகாப்பாக வழிநடத்திச் செல்லவில்லை என்று வாஷிங்டன் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையில் சென்ற கப்பல் ஒன்றைத் திடீரெனச் சில படகுகள் சுற்றி வளைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அவை ஈரானுக்குத் தொடர்புடைய படகுகள் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் அந்த நேரத்தில் சில ஹெலிகாப்டர்கள் கப்பல்கள் அருகே வந்ததால் சந்தேகத்திற்குரிய படகுகள் அங்கிருந்து புறப்பட்டன. கப்பலும் பாதுகாப்பாக அதன் பயணத்தைத் தொடர்ந்தது.
இந்நிலையில், செவ்ரான் கப்பல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக் விர்த், ஹோர்முஸ் நீரிணையில் சென்ற சில கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக புளூம்பர்க் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் சென்றால் வரும் நாள்களில் பல கப்பல்கள் செல்லக்கூடும். இதனால் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான விநியோகம் படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்பக்கூடும்.

