சோல்: தென்கொரியாவில் தனி வீடுகளில் வாழும் ஒற்றையரின் எண்ணிக்கை முதல்முறையாக 10 மில்லியனைக் கடந்துள்ளது.
தென்கொரிய உள்துறை, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி கடந்த ஆண்டு டிசம்பர் 31ல் நாட்டின் பதிவுசெய்யப்பட்ட மக்கள்தொகை 51.2 மில்லியன். 2020ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 51.8 மில்லியன்.
மக்கள்தொகை சரிவுக்கு இடையே தனி வீடுகளில் வாழும் ஒற்றையர் எண்ணிக்கை 2020லிருந்து 2024க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.
2020ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 9 மில்லியன் ஒற்றையர் தனியாக வாழ்ந்ததாகப் புள்ளிவிவரங்கள் சுட்டின. கடந்த ஆண்டு நிலவரப்படி அது 10.1 மில்லியனானது.
வயதான பெரியவர்கள் தனியாக வசிப்பதால் தனியாக வாழும் ஒற்றையர் எண்ணிக்கை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு 65 வயதுக்கும் மேற்பட்டோர் உள்ள 56.5 மில்லியன் குடும்பங்களில் 2.13 மில்லியன் பேர் தனியாக வாழ்வது தெரியவந்தது. தென்கொரியாவில் 65 வயதுக்கும் மேற்பட்டோர் மூத்த குடிமக்களாகக் கருதப்படுகின்றனர்.
2015ஆம் ஆண்டிலிருந்து தனியாக வாழும் மூத்தோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துவரும் போக்கைக் காண முடிவதாகத் தென்கொரியா கூறியது. கடந்த ஆண்டு ஏறக்குறைய 37.8 விழுக்காடு மூத்தோர் தனியாக வாழ்கின்றனர்.
திருமணத்தைத் தள்ளிப்போடும் இளம் கொரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகக் கல்விக்குப் பின் அல்லது வேலை கிடைத்த பின் தனியாக வாழ பல ஒற்றையர் விரும்புவதும் கண்டறியப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
திருமணம் முடித்த பிறகு குடும்ப வாழ்க்கையைத் தொடங்க பெற்றோர் வீட்டைவிட்டு பலர் தனி வீட்டுக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த எண்ணம் அண்மை ஆண்டுகளில் தனிமனித சுதந்திரத்துக்கானதாக மாறிவருவதாக நிபுணர்கள் கூறினர்.
தென்கொரியாவில் தனியாக வாழும் ஒற்றையரில் 3.2 மில்லியன் பேர் 20 அல்லது 30 வயதுகளைச் சேர்ந்தவர்கள். 3.81 மில்லியன் பேர் 65 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோர்.