மலேசிய வாடிக்கையாளர்கள் வாங்கும் அதிகபட்ச அரிசி மூட்டை எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
e1ae203d-c986-424f-9c3c-63ed6d4e3214
ஒரு பரிவர்த்தைனியில் வாங்கக்கூடிய 10 கிலோ உள்ளூர் அரிசி மூட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. - படம்: மலாய் மெயில்

செர்தாங் (மலேசியா): மலேசியாவில் ஒரு பரிவர்த்தனையில் வாங்கக்கூடிய உள்ளூர் 10 கிலோகிராம் அரிசி மூட்டைகளின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஐந்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த அரிசி மூட்டைகள் ஒவ்வொன்றும் 26 ரிங்கிட் (7.82 வெள்ளி) விலைக்கு விற்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்களிடையே தற்போதுள்ள தேவையையும் குறிப்பிட்ட சில சமூகத்தினரின் தேவைகளையும் பூர்த்திசெய்ய இந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளதாக மலேசிய வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகம்மது சாபு கூறினார் என்று மலாய் மெயில் ஊடகம் தெரிவித்தது. குறிப்பாக வசதி குறைந்த குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.

“ஏப்ரல் மாத நடுப்பகுதி நிலவரப்படி 10 கிலோ அளவு உள்ளூர் அரிசி கொண்ட மொத்தம் 3.16 மூட்டைகள் நாடு முழுவதும் இருக்கும் 47,000க்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட சில்லறை வர்த்தகப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

“சிலாங்கூர், கெடா, பேராக், ஜோகூர் போன்ற மாநிலங்களில்தான் ஆக அதிக எண்ணிக்கையில் (அரிசி மூட்டைகள்) விநியோகிக்கப்பட்டன. நாட்டுக்கான அரிசியைப் பாதுகாக்க அமைச்சு எடுக்கும் முக்கிய நடவடிக்கைகளில் அம்முயற்சி அடங்கும்,” என்று திரு முகம்மது சாபு குறிப்பிட்டார்.

மாதந்தோறும் நடக்கும் தமது வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சின் சந்திப்பின்போது அவர் இவ்விவரங்களை வெளியிட்டார்.

பெரிய பிரச்சினையாகப் பார்க்கப்படும், உணவு வீணடிக்கப்படும் போக்கு குறித்தும் திரு முகம்மது பேசினார். குறிப்பாகப் பண்டிகைக் காலங்களுக்கு இது பொருந்தும்.

2023ஆம் ஆண்டு நோன்புப் பெருநாள் காலத்தில் மட்டும் ஏறத்தாழ 90,000 டன் அளவு உணவு வீணக்கப்பட்டதை அவர் சுட்டினார்.

“இந்தப் போக்கு, வளங்கள் வீணடிக்கப்படுவதை எடுத்துக்காட்டுவதோடு பொருளியல் மற்றும் சரியாக நடந்துகொள்வது, சுற்றுச்சூழலுக்கான மீள்திறன் போன்றவற்றின் தொடர்பில் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தியுள்ளது,” என்று திரு முகம்மது விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்