தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய இளையர்களிடையே செயற்கை போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு

2 mins read
2c0aa8a3-953b-4e81-8946-9cc806caef48
மாதிரி போதைப்பொருள் பக்கம் பலர் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: மலேசிய இளையர்களிடையே உண்மையான போதைப்பொருள்கள் தரும் உணர்வைத் தரக்கூடிய செயற்கை போதைப்பொருள் (synthetic drugs) புழக்கம் அதிகரித்து வருவதாக அந்நாட்டு போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவு இயக்குநரான ஆணையர் கோ கோக் சின் கூறியுள்ளார்.

இளையர்கள் போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். குறிப்பாக செயற்கை போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு இது இன்றியமையாதது என்று சுட்டிய அவர், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஆற்றக்கூடிய பங்கும் அதில் அடங்கும் என்று சொன்னார்.

போதைப்பொருள் தொடர்பிலான நடவடிக்கைகள், போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவது ஆகியவற்றின் தொடர்பில் ஏதேனும் தெரியவரும்போது எங்களுக்குத் தகவல் தந்து இப்பிரச்சினைக்கு எதிரான போராட்டத்தில் எங்களுடன் சேர்ந்து ஈடுபடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று திரு கோ நேர்காணல் ஒன்றில் கூறினார்.

கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி மலேசியாவில் போதைப் பழக்கத்துக்கு அடிமையான கிட்டத்தட்ட 170,000 பேரில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் செயற்கை போதைப்பொருளைப் பயன்படுத்தியவர்கள் என்று அந்நாட்டின் தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பான (AADK - ஏஏடிகே) தெரிவித்தது.

செயற்கை போதைப்பொருள்கள் அதிக வீரியம் கொண்டவை என்றும் அவை மனநலம், உடல்நலம் இரண்டுக்கும் அபாயம் விளைவிக்கக்கூடியவை என்றும் திரு கோ எடுத்துச் சொன்னார். சியாபு, ஐஸ், எக்ஸ்டசி எனப் பல பெயர்களில் விளம்பரப்படுத்தப்படும் மாதிரி போதைப்பொருள் வகைகள், சாதாரண போதைப்பொருளைக் காட்டிலும் உட்கொள்பவரிடம் கூடுதல் வேகமாக ‘தாக்கத்தை’ ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

அதனால் குறைவான வீரியம் கொண்ட போதைப்பொருள்களுக்குப் பழகிப்போனவர்களை செயற்கை போதைப்பொருள் வகைகள் ஈர்க்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

“இதன் தொடர்பிலான போக்கு, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் போதைப்பொருள் வகைகளிலிருந்து செயற்கை போதைப்பொருள் பக்கம் குறிப்பிடத்தக்க வகையில் மாறுவதைக் காண முடிகிறது. சமூக அளவிலான தாக்கம், அணுகுமுறை மாற்றங்கள் உள்ளிட்டவை அவற்றுக்கான காரணங்கள்,” என்று திரு கோ சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்