சோல்: கவனக்குறைவு பிரச்சினை உள்ளோருக்கு வழங்கப்படும் ஏடிஎச்டி மாத்திரையை தென்கொரிய இளையர்கள் தவறாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.
இதனை, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) தென்கொரிய அரசாங்கத்தின் உணவு மற்றும் மருந்துப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
மேலும், ஏடிஎச்டி மாத்திரையை மருத்துவத் தேவைக்குப் பயன்படுத்துவதைவிட கல்வியில் சிறப்பாகச் செய்ய இளையர்கள் பயன்படுத்தி வருவது கவலைக்குரிய போக்கு என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாத்திரையை தென்கொரிய இளையர்கள் ‘ஸ்மார்ட்’ மாத்திரைகள் என்று பெயரிட்டுப் பயன்படுத்தி வருகிறார்கள்.
2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மூன்று காலாண்டுகளில் 19 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய நோயாளிகள் அதனை அதிகம் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த ஒன்பது மாதங்களில் ‘மெத்தில்ஃபெனிடேட்’ என்னும் ஏடிஎச்டி மாத்திரையை 113,262 வாலிபர்கள் எடுத்துக்கொண்டனர். 2024ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் அந்த மருந்தை 107,267 வாலிபர்கள் பயன்படுத்தினர்.
இளம்பெண் நோயாளிகளிடமும் அந்தப் போக்கு அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு 45,764 இளம்பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 49,209ஆக அதிகரித்துள்ளது.
‘மெத்தில்ஃபெனிடேட்’ என்பது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டக்கூடிய மாத்திரை ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
கல்வியில் செயல்திறனை அதிகரிக்க விரும்பும் தென்கொரிய மாணவர்களும் அவர்களைச் சாதிக்கத் தூண்டும் பெற்றோர்களும் அந்த மாத்திரையைத் தவறாகப் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளதாக அரசாங்க அறிக்கை தெரிவித்தது.

