இந்தோனீசியாவில் காட்டுத்தீ; புகைமூட்டத்தால் கிருமித்தொற்று அதிகரிப்பு

இந்தோனீசியாவில் காட்டுத்தீ; புகைமூட்டத்தால் கிருமித்தொற்று அதிகரிப்பு

2 mins read
88c94d99-c50d-48e2-acd9-17cbf5035b59
இந்தோனீசியாவின் தெற்குச் சுமாத்ரா மாநிலத்தில் உள்ள பாலெம்பாங்கில் செப்டம்பர் 8ல் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நிலவும் காட்டுத்தீயால் மூச்சு வழியாக ஏற்படும் கிருமித்தொற்றுகள் ஒரு வாரத்திற்குள் இருமடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பரந்த காடுகளிலும் சதுப்பு நிலங்களிலும் தீப்பிழம்புகள் எரிந்து வருகின்றன.

குறிப்பாக சுமத்ரா, போர்னியோ வட்டாரத் தீவுகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அபாயகரமான புகைமூட்டம் அதிகரித்துள்ளன.

‘சூப்பர்-எல் நினோ’ பருவம் வெப்பநிலையை அதிகரிப்பதாலும் கடுமையான வறட்சியை ஏற்படுத்துவதாலும் இம்முறை காட்டுத்தீ, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் தீவிரமடைந்துள்ளது.

உலக அளவில் வெளிவரும் காட்டுத்தீ புகையின் அளவில் மூன்றில் ஒரு பங்கு இந்தோனீசியாவிலிருந்து வெளிவருகிறது. 

அந்நாட்டுச் சுகாதார அமைச்சு வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, காட்டுத்தீ தொடர்பான சுவாச நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 1ஆம் தேதி 50,891ஆக இருந்து செப்டம்பர் 9ஆம் தேதி நிலவரப்படி 113,336ஆக உயர்ந்துள்ளது.

ஏழு மாநிலங்களில் தீயினால் ஏற்பட்ட புகையால் 12.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

மாசுபாட்டைச் சமாளிக்க குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காகக் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் முகக்கவசங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கூடுதல் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு பொருட்களை அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எந்தப் பகுதிகளுக்கு அதிக சுகாதாரப் பணியாளர்கள் தேவை என்பதைக் கண்காணித்து, அவர்களை அங்கு அனுப்புவோம்,” என்று அவர் கூறினார்.

எல்லை தாண்டிய புகையின் காரணமாக சிங்கப்பூரும் மலேசியாவும் ஆரோக்கியமற்ற காற்றின் தரநிலைகளைப் பதிவு செய்துள்ளன.

இந்தோனீசியா தீயை எதிர்த்துப் போராட உதவுவதற்காக, ஜப்பான் மூன்று ‘சிஎச்-47 சினூக்’ ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. 

குறிப்புச் சொற்கள்
காட்டுத் தீகிருமித்தொற்றுஅதிகரிப்புதொற்று