கூலாய்: கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு, செயல்பாட்டுச் செலவுகள், குறிப்பாக டீசல் விலை உயர்வு, நாடு முழுவதும் சாலைக் கட்டுமானம், சாலைப் பராமரிப்புத் திட்டங்களில் மேலும் தாமதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களுடன் தொடர்புடைய செலவு அழுத்தங்களால், தாமதமாகும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தமது அமைச்சு எதிர்பார்ப்பதாகப் பொதுப்பணித்துறை துணை அமைச்சர் அஹமது மஸ்லான் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறையின் கீழ் 28 அமைச்சுகள் ஈடுபட்டுள்ள 855 திட்டங்களில், முந்தைய திட்டப் பங்கீட்டின்படி மூன்றில் ஒரு பங்குத் திட்டங்கள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பும், மூன்றில் ஒரு பங்குத் திட்டங்கள் திட்டமிட்டபடியும், மூன்றில் ஒரு பங்குத் திட்டங்கள் பின்தங்கியும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சாலைக் கட்டுமானம், சாலைப் பராமரிப்புத் திட்டங்கள், லாரிகள், சாலை அமைக்கும் கனரக வாகனங்கள் போன்ற டீசல் இயந்திரங்களை அதிக அளவில் சார்ந்திருப்பதால், அவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்கினார்.
“சாலைக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஏறக்குறைய அனைத்து வாகனங்களும் டீசலில் இயங்குகின்றன. அதன் விலை, சந்தை விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பெரிய கவலையாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
சாலைப் பராமரிப்பு மற்றும் புதிய கட்டுமானத் திட்டங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதே சமயம் கட்டடக் கட்டுமானத் திட்டங்கள் ஏற்கெனவே உள்ள மூலப்பொருள் கையிருப்புகளால் ஓரளவு சமாளிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
“இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தாமதமாகும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று அவர் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) கூலாய் மாவட்டப் பொதுப்பணித்துறைக்குப் பணி நிமித்தமாக மேற்கொண்ட அதிகாரபூர்வப் பயணத்தின்போது தெரிவித்தார்.
பணிகள் நிறுத்தப்படாது
அந்தச் சவால்கள் இருந்தபோதிலும், ஒப்பந்தக்காரர்கள் பணிகளை நிறுத்த அனுமதிக்கப்படவில்லை என்று திரு அகமது வலியுறுத்தினார். செலவைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, சிலர் செயல்பாடுகளைக் குறைக்க விண்ணப்பித்திருந்தாலும், அத்தகைய கோரிக்கைகளுக்கு அமைச்சிடமிருந்து இன்னும் முறையான ஒப்புதல் கிடைக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வின் அளவைத் தீர்மானிப்பதற்காக, மலேசியப் புள்ளியியல் துறையிடமிருந்து அதிகாரபூர்வத் தரவுகளைப் பெறவும் அமைச்சு பணியாற்றி வருவதாக அவர் கூறியதாகப் பெர்னாமா தெரிவித்தது.

