மலேசியாவின் ஏழு பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றுத்தரம்

மலேசியாவின் ஏழு பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றுத்தரம்

2 mins read
ee039328-d91e-41a5-9926-4da1e10425d4
சரவாக்கின் கூச்சிங் சிட்டியைச் சுற்றியுள்ள பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

ஈப்போ: மலேசியாவின் சரவாக்கில் உள்ள ஆறு பகுதிகளிலும் சிலாங்கூரின் ஒரு பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) காற்றுத்தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவுசெய்துள்ளது. சரவாக்கில் செரியான் (171), சமரஹான் (156), பிந்துலு (155), கூச்சிங் (155), சமாலாஜு (153), ஸ்ரீ அமான் (146) ஆகிய ஆறு பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத்தரக் குறியீட்டு அளவைப் பதிவுசெய்தன.

அதேவேளையில், சிலாங்கூரில் ஜோகான் செத்தியா பகுதி 151 எனும் ஆரோக்கியமற்ற குறியீட்டைப் பதிவுசெய்தது. இரண்டு பகுதிகள் நல்ல காற்றுத் தரத்தையும் 59 பகுதிகள் மிதமான அளவையும் பதிவுசெய்தன.

ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.56 மணிக்கு வெளியிட்ட வட்டாரப் புகைமூட்ட நிலவர அறிக்கையில், அடுத்த சில நாள்களுக்குத் தெற்கு ஆசியான் வட்டாரத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தொடர்ந்து நிலவும் எனக் கணித்துள்ளது.

இருப்பினும், சுமத்ராவின் வடக்கு, மத்திய பகுதிகளிலும் தீபகற்ப மலேசியாவிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீடித்த வறட்சியான சூழலை எதிர்கொள்ளும் தீப்பற்றக்கூடிய பகுதிகளில் தீச்சம்பவங்களும் புகைமூட்ட நிலவரமும் மேலும் தீவிரமடையக்கூடும் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக எல்லை தாண்டிய புகைமூட்டம் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

தெற்கு ஆசியான் வட்டாரத்தில் காற்று பெரும்பாலும் தென்கிழக்கு அல்லது தெற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, மத்திய கலிமந்தான் மற்றும் சுமத்ராவின் தெற்குப் பகுதிகளில் தீப்பற்றி எரியும் பகுதிகள் பரவலாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதேவேளையில், தெற்கு ஆசியான் வட்டாரத்தின் பிற இடங்களில் சில தனிப்பட்ட தீச்சம்பவங்கள் பதிவாகின.

மேற்கு கலிமந்தானில் ஏற்பட்ட மிதமான எல்லை தாண்டிய புகைப் படலங்கள், வடக்கு நோக்கி நகர்ந்து சரவாக்கின் மேற்குப் பகுதிகளுக்குச் சென்றன. மேற்கு, மத்திய கலிமந்தான் மற்றும் சரவாக்கின் மத்திய, மேற்குப் பகுதிகளில் உள்ள சில காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் ஆரோக்கியமற்ற அளவைப் பதிவுசெய்தன.

சுமத்ரா, போர்னியோ தீவுகளில் ஆகஸ்ட் தொடக்கத்திலிருந்து பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்கு நிலவும் வறட்சிக் காலத்தில் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீயால் மலேசியாவின் சில பகுதிகளில் புகைமூட்டம் ஏற்படுகிறது.

குறிப்புச் சொற்கள்