பாரிஸ்: உலக நாடுகளில் கொசுக்களால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் பெரும் நெருக்கடி எழும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றம் கொசுக்களுக்கு அதிகப் பயன் அளிப்பதாகவும் அதனால் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் ஆபத்தில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஓர் ஆண்டில் கொசுக்களால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.
பிரெஞ்சு பாலினேசியத் தீவாக உள்ள தாகிதியில் கொசுக்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு காலகட்டத்தில் மூவரில் ஒரு பெரியவருக்கு யானைக்கால் நோய்ப் பாதிப்பு இருக்கும். அதற்கு முக்கியக் காரணமாகக் கொசுக்கள் இருந்தன.
தற்போது அந்த நிலைமை மாறினாலும் பருவநிலை மாற்றத்தினால் கொசுக்களின் தன்மை மாறலாம் அதனால் பலர் நோய்வாய்ப்பட்டு இறக்கலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கொசுக்களிடம் இருந்து எல்லா நேரமும் பாதுகாப்பாக இருக்க முடியாது எனக்கூறும் அவர்கள், டெங்கி, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா, ஸிகா போன்றவற்றை ஏற்படுத்தும் டைகர் வகைக் கொசுக்கள் உலக நாடுகள் பலவற்றில் பரவியுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.
முன்பு டைகர் வகைக் கொசுக்கள் வெப்பமான வட்டாரங்களில்தான் இருக்கும் ஆனால் இப்போது பிரான்சின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது. இது கவலைக்குரியது என்று அவர்கள் கூறினர்.
பூமியில் வெப்பம் அதிகரிப்பது கொசுக்களுக்குச் சாதகமாக மாறியுள்ளது, அதனால் அவை வேகமாக உருவாகுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
கொசுக்களை அழிப்பதிலும் அவற்றைத் தடுப்பதிலும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆய்வுக்குப் பல மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டு வருகிறது.

