பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் காணாமல் போன சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் கவலை அளிப்பதாக மலேசியாவில் உள்ள பாதுகாப்பான சமூகத்துக்கான கூட்டணியின் தலைவர் திரு லீ லாம் தாய் தெரிவித்தார்.
இதற்குத் தீர்வு காண உடனடி, ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
காணாமல் போன ஒவ்வொரு சிறுவரும் கற்பனை செய்து பார்க்க முடியாத துன்பத்துக்கு ஆளாகக்கூடும் என்று திரு லீ எச்சரிக்கை விடுத்தார்.
இது அவர்களது குடும்பத்தையும் சமூகத்தையும் வெகுவாகப் பாதிக்கக்கூடும் என்றார் அவர்.
“காணாமல் போன சிறுவர்களில் சிலர் வீட்டைவிட்டு ஓடியவர்கள். மற்றவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம். அவர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகியிருக்கலாம். சிலர் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடும்.
“இப்பிரச்சினையைக் களைய பன்னோக்கு அணுகுமுறை அவசியம். இதில் பெற்றோர், பள்ளிகள், சட்ட அமலாக்கம், சமூகம் ஒன்றிணைந்து தீவிரமாகச் செயல்பட வேண்டும்,” என்று திரு லீ தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள ஐந்து பரிந்துரைகளை அவர் முன்வைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சிறுவர்கள் காணாமல் போவதைத் தடுப்பதும், அப்படியே காணாமல் போனால் மேற்கொள்ளப்படும் சட்ட அமலாக்கத்தை மேம்படுத்துவதும் அதில் அடங்கும்.
சிறுவர் துன்புறுத்தல், கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் திரு லீ கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு, சமூக ஈடுபாடு ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்றும் தரவுத் திரட்டல் மற்றும் ஆய்வை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இணையம் வாயிலாகவும் அன்றாட வாழ்க்கையிலும் தங்கள் பிள்ளைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பெற்றோர் மிக உன்னிப்பாகக் கண்காணிப்பது அவசியம்,” என்று திரு லீ வலியுறுத்தியுள்ளார்.

