வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிகளவில் கிடைக்கக்கூடிய சக்திவாய்ந்த செயற்கை போதைப்பொருளால் அங்குள்ள நிலைமை மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முழுக்க முழுக்க மனிதர்களால் உருவாக்கப்படும் ‘ஃபென்டனைல்’, ஹெராயினைவிட 50லிருந்து 100 மடங்கு போதை மிகுந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்தகைய சக்தி வாய்ந்த போதைப்பொருள்கள் அமெரிக்க வீடுகளின் கீழ்த்தளங்களிலும் குளியலறைகளிலும் எளிதில் தயாரிக்கப்படுகின்றன.
அளவுக்கு அதிகமான போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக மரணமடைவோரைக் காப்பாற்ற ஆர்வலர்கள் பலர் முயன்று வருகின்றனர்.
2022ஆம் ஆண்டு, செயற்கை போதைப்பொருள் உட்கொண்டதால் 110,000 அமெரிக்கர்கள் மாண்டதாகப் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. இருப்பினும், அதிக விழிப்புணர்வால் போதைப்பொருளால் உயிரிழப்போர் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வோர் ஆண்டும் போதைப் பொருளால் உயிரிழப்போர் எண்ணிக்கை 70,000ஆகப் பதிவானது.
எனினும், செயற்கை போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
போதைப்பொருள் புழங்கிகளுக்குக் கைகொடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஓஹாயோவில் உள்ள கிளென்வூட் ஆலயத்தில் ‘ஹொப் டீலர் கம்யூனிட்டி’ என்ற அமைப்பு போதைப் புழங்கிகளுக்கு உதவுகிறது. போதைப்பொருள் உட்கொண்டதால் பாதிக்கப்பட்டோர், போதைப் புழங்கிகளின் குடும்பங்களைச் சேர்ந்தோர், ஆலய உறுப்பினர்களின் முன்னிலையில் வந்து தங்கள் சிரமங்களைப் பகிர்ந்துகொள்வர்.
கொலம்பஸ், சிக்காகோ ஆகிய நகரங்களில் கொக்கைன் உட்கொண்டோரிடையே ஃபென்டனைலும் காணப்பட்டது.
கொலம்பசில் உள்ள ஃபிரெங்லின் பகுதியில் போதைப்பொருளால் ஏற்பட்ட மரணங்களில் கிட்டத்தட்ட 78 விழுக்காடு செயற்கை போதைப்பொருள்களால் ஏற்பட்டவை என்று வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
ஓஹாயோவில் கறுப்பின ஆடவரிடையே அளவுக்கு அதிகமாகப் போதைப்பொருள் உட்கொண்டதால் ஏற்பட்ட மரணங்கள் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.
