டாக்கா: பங்ளாதேஷும் இந்தியாவும் எல்லையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட உளவுத்துறை ஒத்துழைப்பு, ஒன்றிணைந்த கண்காணிப்பு ஆகியவை மூலம் அதை மேற்கொள்ள அவை திட்டமிடுகின்றன.
உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இந்திய அதிகாரிகள் குடியேறிகளை எல்லைத் தாண்டி அனுப்ப முயற்சி செய்வதாக பங்ளாதேஷ் குறைகூறியது.
இந்நிலையில், இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல் ஆக்கபூர்வமாகவும் அமைதியாகவும் இருந்தது என்று பங்ளாதேஷின் முதன்மை எல்லைப் பாதுகாப்புப் படையும் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையும் தெரிவித்தன.
உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே புதுடெல்லியில் நடைபெற்ற நான்கு நாள் கூட்டத்துக்குப் பிறகு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
சட்டவிரோதமாகவும், கட்டாயத்தின் பேரிலும் எல்லைகளைக் கடந்து செல்லும் குடியேறிகள் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அண்மைய மாதங்களில் அது சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.
பங்ளாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையே 4,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம்கொண்ட எல்லைப் பகுதி உள்ளது. உலகின் ஆக நீளமான எல்லைப் பகுதியாக அது கருதப்படுகிறது.
கள்ளக் குடியேறிகள் எல்லைதாண்டி வருவதை அண்மைய வாரங்களில் பங்ளாதேஷ் எல்லைப் பாதுகாப்புப் படைகள் தகர்த்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
உளவு நடவடிக்கைகளையும் ஆளில்லா வானூர்தி மூலம் கண்காணிப்புப் பணிகளையும் பங்ளாதேஷ் அதிகரித்துள்ளது.
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவில் வசித்துவரும் 2,860க்கும் அதிகமானோரின் குடியுரிமையைச் சரிபார்க்கும்படி பங்ளாதேஷ் அரசாங்கத்திடம் இவ்வாண்டு மே மாதம் தெரிவித்ததாக இந்தியா கூறியது.
இதற்கிடையே, பங்ளாதேஷ் மற்றும் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் டாக்காவில் வரும் நவம்பர் மாதம் சந்திக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

