டெஹ்ரான்: புதுடெல்லியிலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிவருவதற்காகக் கிளம்ப இருந்த விமானத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அந்நாட்டின் மஷ்ஹாத்அனைத்துலக விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்தின வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் மஹான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று தாக்கப்பட்டதாக அது கூறியது.
மனிதாபிமான அடிப்படையில் மருத்துவப் பொருள்களை ஏற்றி வரவிருந்த பயணிகள் விமானத்தைத் தாக்கியது, அனைத்துலகச் சட்டங்களை மீறும் போர்க்குற்றம் என்று ஈரானின் பொதுப் விமானப் போக்குவரத்து அமைப்பு கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது உலகளாவிய விமானப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் அது எச்சரித்துள்ளது.
ஈரானியப் புரட்சிகர காவல்படையுடன் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறி மஹான் ஏர் நிறுவனத்துக்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா பொருளியல் தடைவிதித்துள்ளது.
தாக்குதல் பற்றி மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்து வாஷிங்டனும் உறுதிப்படுத்தவில்லை.
இந்தியா - ஈரான் இடையேயான மனிதாபிமான ஒத்துழைப்பு வலுவடைந்து வரும் வேளையில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
குறிப்பாக, அண்மையில் இந்தியா, ஈரானுக்குப் பல்வேறு உதவிப் பொருள்களை வழங்கியிருந்தது. இந்தத் தாக்குதலால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

