ரோஹிங்யா மக்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் இந்தியா

2 mins read
bc760a5f-3f91-412d-968a-7f5fceda9ebb
புதுடெல்லியில் உள்ள முகாம்களில் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். - படம்: ஏஎஃப்பி

பெங்களூரு: பாகிஸ்தான்மீது இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்திய அதே வாரத்தில் இந்திய அரசாங்கம் குறைந்தது 40 ரோஹிங்யா அகதிகளை மே 6ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதி வரை மியன்மாருக்குத் திருப்பி அனுப்பியது.

இந்தியக் கடற்படைப் படகிலிருந்து அந்தமான் கடலில் அகதிகள் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாட்டு நிறுவனம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அதே சமயத்தில் இந்தியா மேலும் 50 ரோஹிங்யா அகதிகளை வடகிழக்கு மாநிலமான அஸாமிலிருந்து பங்ளாதே‌ஷுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் வழக்கத்துக்கு மாறாக எல்லை கடந்து கடக்கும்படி அனுப்பப்பட்டனர்.

அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல், இனப்படுகொலை ஆகியவை காணப்படும் மியன்மாருக்கு ரோஹிங்யா அகதிகளைத் திரும்ப அனுப்புவதை நிறுத்திக்கொள்ளும்படி ஐக்கிய நாட்டு நிறுவனமும் அனைத்துலக அகதிகள் உரிமை அமைப்புகளும் இந்தியாவைக் கேட்டுக்கொண்டன.

2017ஆம் ஆண்டு மியன்மார் ராணுவத்தின் அடக்குமுறையால் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யாக்கள் நாட்டைவிட்டு தப்பியோடினர். ஏறக்குறைய 40,000 ரோஹிங்யா அகதிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்ததாக மதிப்பிடப்படுகிறது.

புதுடெல்லியின் கஞ்சன்குஞ் என்ற சேரிப் பகுதியில் கிட்டத்தட்ட 260 ரோஹிங்யாக்கள் தங்கியுள்ளனர்.
புதுடெல்லியின் கஞ்சன்குஞ் என்ற சேரிப் பகுதியில் கிட்டத்தட்ட 260 ரோஹிங்யாக்கள் தங்கியுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகள்மீது ஆளும் பாரதிய ஜனதா கட்சி எடுக்கும் அரசியல் நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக ரோஹிங்யா அகதிகள்மீது இந்தியா கடும் நடவடிக்கை எடுப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட பாதி ரோஹிங்யா அகதிகள் அதாவது ஏறக்குறைய 20,000 பேர் ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமை மன்றத்தில் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழ்மையான டெல்லி பகுதிகளில் வசிக்கின்றனர். மற்றவர்கள் கால வரையறையின்றி தடுப்புக் காவல் நிலையங்களில் உள்ளனர்.

இந்திய அரசாங்கம் அவர்களின் நடமாட்டத்தையும் வாழ்க்கை முறையையும் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும் இந்திய நீதிமன்றம் அடிப்படைக் கல்வி, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றைப் பெற அவர்களை அனுமதிக்கிறது.

பங்ளாதே‌ஷின் காக்ஸ் பசார் வட்டாரத்தில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்யா அகதிகள்.
பங்ளாதே‌ஷின் காக்ஸ் பசார் வட்டாரத்தில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்யா அகதிகள். - படம்: ராய்ட்டர்ஸ்
குறிப்புச் சொற்கள்