மியன்மார் ராணுவ ஆட்சி எதிர்ப்புப் படைகளுக்கு இந்தியா முதல் முறையாக அழைப்பு

மியன்மார் ராணுவ ஆட்சி எதிர்ப்புப் படைகளுக்கு இந்தியா முதல் முறையாக அழைப்பு

1 mins read
1f02773d-2374-4bec-8759-74cd16ec514b
கருத்தரங்கிற்கு மியன்மாரை ஆட்சி செய்யும் ராணுவத் தலைவர்கள் அழைக்கப்படுவார்களா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்ள மியன்மாரை ஆட்சி செய்யும் ராணுவத்துக்கு எதிராக அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் போராடி வரும் அமைப்புகளுக்கு இந்திய அரசாங்கம் முதல்முறையாக அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக முறைப்படி மியன்மார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து அந்நாட்டை ஆட்சி செய்துவரும் ராணுவத் தலைவர்களுக்கு மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால் அவர்களுடனான உறவை இந்தியா தொடர்கிறது.

இந்நிலையில், தற்போது மியன்மார் ராணுவத்துக்கு எதிரான அமைப்புகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் கருத்தரங்கிற்கு தேசிய ஐக்கிய அரசாங்கத்துடன் சின், ரக்கைன், கச்சின் மாநிலங்களைச் சேர்ந்த போராளிகள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக மியன்மாரில் ஆயுதம் ஏந்திப் போராடி வரும் அமைப்பு ஒன்றின் தலைவர் தெரிவித்தார்.

கருத்தரங்கை இந்திய அரசாங்க நிதி பெற்ற உலக விவகாரங்களுக்கான இந்திய மன்றம் ஏற்று நடத்துகிறது.

மன்றத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அங்கம் வகிப்பதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத இருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்தியா-மியன்மார் எல்லைப் பகுதியில் நிலவும் நிலையற்றத்தன்மை, மியன்மாரில் இந்தியத் திட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் ஆகியவை குறித்து ஜூன் மாதத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்திருந்தார்.

கருத்தரங்கிற்கு மியன்மாரை ஆட்சி செய்யும் ராணுவத் தலைவர்கள் அழைக்கப்படுவார்களா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்