புதுடெல்லி: கனடாவில் இந்துக் கோவில் ஒன்றைச் சேதப்படுத்தி, அங்கிருந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கட்கிழமை (நவம்பர் 4) இரவு எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கனடாவில் உள்ள இந்துக் கோவில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நம் அயலக மக்களை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் அதிர்ச்சிகரமானவை.
“இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. இந்த விவகாரத்தில் கனடிய அரசு நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்,” எனக் கூறினார்.
‘மிகுந்த கவலையளிக்கிறது’
டொரொன்டோ நகர் அருகே பிராம்ப்டன் பகுதியில் உள்ள அந்தக் கோவில் ஞாயிற்றுக்கிழமை சேதப்படுத்தப்பட்டது மிகுந்த கவலையளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர், தலைநகர் கேன்பராவில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) செய்தியாளர்களிடம் பேசினார்.
“கனடாவில் இந்துக் கோவிலில் நடந்த சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது,” என்றார் அவர்.
2023ல் கனடாவில் சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஒருவரின் கொலையுடன் இந்திய அரசதந்திரிகள் அறுவரை தொடர்புபடுத்தி, அவர்களை கனடா வெளியேற்றி சில வாரங்களான நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்தது.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயும் சீக்கியப் பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசதந்திரிகளுக்கும் இடையேயும் இந்தச் சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் முறையை கனடா ஏற்படுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்திய-ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்களின் 15வது கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “நான் கனடா குறித்து மூன்று விஷயங்களைச் சொல்லவேண்டும். முதலில், கனடா ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் முறையைப் பின்பற்றியுள்ளது.
“இரண்டாவது, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை அதன் கண்காணிப்பில் வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மூன்றாவது, கனடாவில் நடக்கும் சம்பவங்கள் பயங்கரவாத சக்திகளுக்கு அங்குள்ள அரசியல் சூழலைக் காட்டுகிறது,” எனக் கூறினார்.
முன்னதாக, அந்தக் கோவிலுக்குள் புகுந்த பக்தர்களை வன்முறையாளர்கள் தாக்கியதற்கு கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

