புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய போதுமான எரிசக்தி இருப்பில் உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஈரான் பூசல் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தினாலும் போதுமான எரிசக்தி இருப்பதாகத் திரு மோடி குறிப்பிட்டார்.
“பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை எந்தத் தடையும் இன்றி விநியோகம் செய்யப்படுவதையும் நாட்டில் உள்ள சாமானியர்களின் குடும்பங்கள் கூடுமானவரை சிக்கலைச் சந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்யவும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறது,” என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் கீழவையில் கூறினார்.
மூன்றாவது வாரத்துக்குள் அடி எடுத்துவைத்த மத்திய கிழக்குப் போரால் எரிசக்திச் சந்தையில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் மெதுவடைந்தது.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவையும் பிற பெட்ரோலிய எண்ணெய்யையும் வட்டார நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது.
இந்தியாவிடம் தற்போது 5.3 மில்லியன் டன் எண்ணெய் இருப்பில் உள்ளதாகச் சொன்ன திரு மோடி, அதை 6.5 மில்லியன் டன்னுக்கு அதிகரிக்கத் திட்டமிடுவதாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறுவதற்குப் புதுடெல்லி உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவைச் சுமந்து சென்றுள்ள இரண்டு இந்தியக் கப்பல்கள் இம்மாதத் தொடக்கத்தில் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தன. மேலும் இரண்டு கப்பல்கள் தற்போது நீரிணையைக் கடந்துகொண்டிருக்கிறது என்று புளூம்பர்க் செய்தி நிறுவனம் திங்கட்கிழமை (மார்ச் 23) சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
வர்த்தகக் கப்பல்கள்மீதான தாக்குதலைம் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதையும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார் திரு மோடி.
வளைகுடா கப்பல் போக்குவரத்துப் பாதைகளை அதிகாரிகள் அணுக்கமாகக் கண்காணித்துவருகின்றனர் என்ற திரு மோடி, கடல்துறை வர்த்தகத்தைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாகக் கூறினார்.

