வெல்லிங்டன்: இந்தியாவும் நியூசிலாந்தும் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
பாதுகாப்பு, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளம், சுற்றுப்பயணம், விளையாட்டு, பேரிடர் மேலாண்மை ஆகிய ஐந்து துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நியூசிலாந்துக்கு மேற்கொண்டுள்ள இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணத்தின்போது அந்த ஒப்பந்தங்கள் கைகூடின.
அவரை நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் விமான நிலையத்திற்குச் சென்று ஆரத்தழுவி வரவேற்றார். ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் இந்தியாவின் தொடர்புகளைத் திரு மோடி வலுப்படுத்த முயன்றுவரும் நிலையில் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.
தலைவர்கள் இருவரும் ஆக்லாந்தில் சந்தித்தனர். இரு நாடுகளின் உறவை உத்திபூர்வப் பங்காளித்துவ நிலைக்கு உயர்த்த அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இரு நாடுகளின் ஜனநாயக விழுமியங்கள், மக்களுக்கு இடையில் நிலவும் ஆழமான தொடர்புகள், இந்தோ-பசிபிக் வட்டார நலன்கள் முதலியவற்றை இது பிரதிபலிக்கிறது என்று தலைவர்கள் அறிக்கையொன்றில் தெரிவித்தனர்.
இந்தோனீசியாவுடனும் ஆஸ்திரேலியாவுடனும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு, திரு மோடி வெள்ளிக்கிழமை இரவு நியூசிலாந்து சென்றுசேர்ந்தார். ஆக்லாந்து அரங்கில் இந்திய வம்சாவளியினரை அவர் சந்திப்பார் என்றும் நியூசிலாந்து வானொலி நிலையம் கூறியது.
இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது 40 ஆண்டுகளில் இதுவே முதன்முறை. இரு நாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக உடன்பாட்டால் நியூசிலாந்தின் ஆளும் கூட்டணிக்குள் எழுந்த பதற்றத்திற்கு இடையிலும் அந்நாட்டில் இந்தியர்களுக்கு எதிரான பகைமைப்போக்கு அதிகரித்துவரும் நிலையிலும் அவரின் பயணம் இடம்பெறுகிறது.
இரு நாடுகளும் பாதுகாப்புத் துறையிலும் நெருங்கி வந்துள்ளன. தற்காப்பு ஒத்துழைப்பு ஏற்பாட்டில் கையெழுத்திட்டதுடன் கடல்துறைப் பாதுகாப்பில் அதிக ஒத்துழைப்புக்கும் அவை உறுதியளித்துள்ளன. இது இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் நிலைத்தன்மை குறித்த இரு நாடுகளின் பொதுவான அக்கறைகளைப் பிரதிபலிக்கிறது.
2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நியூசிலாந்தில் வசிக்கும் 5.3 மில்லியன் பேரில் ஏறக்குறைய 292,000 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது.

