தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-பாகிஸ்தான் பூசல்: அக்கறை தெரிவித்த ஐ.நா

2 mins read
7aaba9c6-9457-4a0a-be63-abc90d98a13c
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ். - படம்: ஏஎஃப்பி

ஜெனிவா: ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பூசல் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இருதரப்பும் ராணுவ நடவடிக்கைகளை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும் என்று குட்டரஸின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால் அது உலக நாடுகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். இவ்வாரத் தொடக்கத்தில் குட்டரஸ் இந்தியா-பாகிஸ்தான் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், “இரு தரப்புக்கும் இடையிலான பூசல் விரைவில் முடிவுக்கு வரவேண்டும்,” என்று தெரிவித்தார்.

சீனாவும் இந்தியா-பாகிஸ்தான் பூசல் குறித்து அக்கறையும் வருத்தமும் தெரிவித்துள்ளது. இருதரப்பும் அமைதி காக்க வேண்டும் என்றும் அது கூறியது.

இந்நிலையில் இந்த நடவடிக்கை தொடர்பாக இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளிடம் விளக்கம் அளித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளிடம் தொடர்பு கொண்டுள்ளார்.

நிலைமையை மேலும் தீவிரமாக்கும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை என்றும் பாகிஸ்தான் தீவிரமடைய முடிவு செய்தால் உறுதியாக பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் அஜித் தோவல் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான பேச்சில் வலியறுத்தியதாக கூறப்படுகிறது.

புதன்கிழமை (மே 7) அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தானின் கா‌ஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது.

கடந்த மாதம் இந்தியாவின் கா‌ஷ்மீர் பகுதியில் சுற்றுலாப் பயணிகள்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடி தரும் விதமாகத் தற்போது இந்தியா பாகிஸ்தான்மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் 20 ஆண்டுகள் இல்லாத அளவில் தற்போது பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்