இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவழியாகச் சண்டைநிறுத்த உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டபோதும் பிணக்கத்தை வெளிப்படுத்தும் ஐந்து நடைமுறைகளை இருநாடுகளும் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றன.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிக நிறுத்தம்
இந்தியா-பாகிஸ்தான் பூசல் மூண்டதை அடுத்து முதல் முறையாகத் திங்கட்கிழமை பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் கைகோக்க முடியாது,” என்றார்.
“தண்ணீரும் ரத்தமும் சேர்ந்து வழிந்துவர முடியாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் எனும் முக்கிய நீர்ப்பகிர்வு உடன்பாடு தொடர்ந்து நிறுத்தப்படுவதை அது சுட்டியது.
உலக வங்கியின் உதவியுடன் 1960களில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 6 ஆறுகளிலிருந்து நீர் பகிரப்படுவதை நிர்வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியாவுடனான நீர்ப் பிரச்சினை சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று நம்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் கூறியுள்ளார்.
முடக்கப்பட்ட விசாக்கள், நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட அரசதந்திரிகள்
இந்தியா, பாகிஸ்தானுடன் உள்ள அரசதந்திர உறவைக் குறைத்துக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் அனைத்துத் தற்காப்புப் பேராளர்களையும் இந்தியா நாட்டைவிட்டு வெளியேற்றியது. தனது தற்காப்பு ஆலோசகர்களையும் இஸ்லாமாபாத் தூதரகத்திலிருந்து இந்தியா மீட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தானும் அதே நடவடிக்கைகளை பதிலுக்குப் பதில் செய்தது. இருநாடுகளும் அவற்றின் தூதரகத்தில் உள்ள மனிதவளத்தைக் கணிசமாகக் குறைத்தன.
பாகிஸ்தான் மக்களுக்கான விசாவை இந்தியாவும் இந்திய மக்களுக்கான விசாவைப் பாகிஸ்தானும் ரத்து செய்தன.
மூடப்பட்ட எல்லைகள்
இந்தியாவும் பாகிஸ்தானும் அட்டாரி - வாகா எல்லைப் பகுதியை மூடின. இருநாடுகளுக்கும் இடையே உள்ள ஒரே தரைவழி எல்லை அட்டாரி - வாகா எல்லைப் பகுதி.
பலத்த பாதுகாப்பு கொண்ட அந்த எல்லையைக் கடக்க சிறப்பு அனுமதி தேவை. குடும்ப உறுப்பினர்களைக் காணவும் திருமணம் போன்றவற்றில் கலந்துகொள்ளவும் பலர் நீண்டகாலமாக அட்டாரி - வாகா எல்லையைத்தான் பயன்படுத்தி வந்தனர்.
குடிமக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப இந்தியாவும் பாகிஸ்தானும் தொடக்கத்தில் ஒரு வாரகால அவகாசம் கொடுத்தன. பின் அது நீட்டிக்கப்பட்டது.
பல குடும்பங்கள் பிரிய நேர்ந்ததால் எல்லைப் பகுதியில் கண்ணீரும் கம்பலையுமாகப் பலர் காட்சியளித்தனர்.
விமானங்களுக்கு அனுமதியில்லை
அனைத்து இந்திய விமானங்களும் தனது வான்வெளியில் பறந்து செல்ல பாகிஸ்தான் தடை விதித்தது.
அதற்குச் சில நாள்களுக்குப் பின் இந்தியாவும் அதே நடைமுறையை அமல்படுத்தியது. பாகிஸ்தானின் ராணுவ, வர்த்தக விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்திச் செல்லத் தடைவிதித்தது.
இதனால் அனைத்துலக விமானங்கள் இப்போது இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியிருப்பதால் செலவும் கூடியுள்ளது
முடங்கிய வணிகம்
இந்தியாவும் பாகிஸ்தானும் அனைத்து நேரடி, மறைமுக வணிகங்களையும் நிறுத்தியுள்ளன.
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்வது குறைவு என்பதால் இந்தியாவுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்ற நிபுணர்கள், பாகிஸ்தானுக்கு அது பெரும்பாதிப்பு என்றனர்.
இதனால், ஏற்கெனவே அதிகரிக்கும் விலைவாசியாலும் வலுவிழந்த பொருளியளாலும் திணறும் பாகிஸ்தான் இன்னும் அதிக நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.