இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகிறது: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் அதிபர்

இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகிறது: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி

2 mins read
80a499b0-58ea-4a8c-b367-a07d8b08b5dc
இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக கூறியுள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, இந்தியாவைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். - படம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

இஸ்லாமாபாத்: இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய திரு ஆசிப் அலி, அமைதியான பேச்சுவார்த்தைக்கும் சமரசத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

“பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக அந்நாட்டுத் தலைவர்கள் கூறுகிறார்கள். பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அதுவே வட்டாரப் பாதுகாப்பிற்கான ஒரே வழி,” என்றார் அவர்.

ஆசிப் அலி சர்தாரியின் உரைக்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறு என்று அவர்கள் முழக்கமிட்டனர். வண்ணம் இருந்தனர். பெரும் கூச்சலுக்கு மத்தியில் ஆசிப் அலி சர்தாரி தனது உரையை வாசித்தார்.

கடந்த 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா நடத்திய ராணுவத் தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளும் நான்கு நாள் ராணுவ மோதலில் ஈடுபட்டன. ஆசிப் அலி சர்தாரி தனது உரையில், ஆப்கானிஸ்தான் உடனான மோதல் குறித்தும் குறிப்பிட்டார்.

“இந்தியாவின் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் செயல்படுகிறது. மற்றொரு நாட்டின் விருப்பத்துக்காக ஆப்கானிஸ்தான் போர்க்களமாகப் பயன்படுத்தப்படுவதை அந்நாடு நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆப்கானிஸ்தான் முன்வர வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா பலமுறை தெரிவித்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்