வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ தெரிவித்துள்ளார்.
எண்ணெய்க்காக இந்தியா கொடுக்கும் பணத்தை உக்ரேனுக்கு எதிரான போருக்காக ரஷ்யா பயன்படுத்துவதாக அவர் கூறினார்.
ரஷ்யாவுடனும் சீனாவுடனும் இந்தியா தற்போது நெருக்கமாக இருக்க முயற்சி செய்வதாக அவர் தெரிவித்தார்.
“அமெரிக்காவின் உத்திபூர்வப் பங்காளியாக நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பினால் அதற்கு ஏற்றாற்போல அது நடந்துகொள்ள வேண்டும்,” என்று தி ஃபைனேன்ஷல் டைம்ஸ் நாளிதழுக்காக தாம் எழுதிய செய்தி அறிக்கையில் திரு நவாரோ குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்குவதை இந்திய வெளியுறவு அமைச்சு முன்னதாகத் தெரிவித்திருந்தது.
எனவே, இந்தியா மட்டும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது என்று சொல்வது முறையாகாது என்று அது தெரிவித்தது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இம்மாதம் இந்தியப் பொருள்களுக்கு எதிராகக் கூடுதலாக 25 விழுக்காடு விதித்தார்.
இதன்மூலம் இந்தியப் பொருள்களுக்கு எதிராக மொத்தம் 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது.