இந்திய விமானப்படையின் இயந்திர கொள்முதல்; 1 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

2 mins read
1393bacc-0bea-4bb1-838e-959db21d211c
தேஜஸ் மார்க்-2 விமானம் - படம்: இணையம்

பெங்களூரு: உலகின் மிகப்பெரிய விமான இயந்திர தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் இந்தியா, வெள்ளிக்கிழமை (நவம்பர் 7)  ஒப்பந்தம் செய்துள்ளது. 

ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்குமேல் அதுன மதிப்புள்ள இந்த ஒப்பந்தம், இந்தியாவின் சொந்தப் போர் விமானமான ‘தேஜஸ் மார்க்-1ஏ ரகத்திற்குத் தேவையான 113 ‘ஜெட் எஞ்சின்’களை வாங்குவதற்காகச் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொள்முதல், இந்திய விமானப்படையை (IAF) வலுப்படுத்தும் மிக முக்கியமான படியாகும். இந்தப் புதிய GE-F404 இயந்திரங்கள் 2027 முதல் 2032 வரை விநியோகிக்கப்பட உள்ளன. 

இது 2021 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 99 இயந்திரங்கள் முந்தைய ஆர்டருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இந்த இயந்திரங்கள் அரசுக்குச் சொந்தமான எச்ஏல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குக் கிடைக்கும். 

எச்ஏஎல் இந்த தேஜஸ் மார்க்-1ஏ ரக விமானங்களைத் தயாரித்து வருகிறது. முதல் பத்து விமானங்கள் கூடிய விரைவில் விமானப்படையில் சேர்ப்பதற்கு வசதியாக, எஞ்சின்கள் தொகுப்பு தொகுப்பாக வந்து சேரும் என்று எச்ஏஎல் எதிர்பார்க்கிறது.

எஞ்சின் பற்றாக்குறையால் ஏற்பட்ட தாமதங்களைத் தீர்க்க இந்த ஒப்பந்தம் உதவுகிறது. மேலும், இது உற்பத்தியை அதிகரிக்க எச்ஏஎல் நிறுவனத்திற்கு வழி வகுக்கும். இதன் மூலம், ஆண்டுக்கு 24 முதல் 30 ஜெட் விமானங்களைத் தயாரிக்க முடியும். 

முதல் பத்து புதிய விமானங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விமானப்படையிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வரை, எச்ஏஎல் நிறுவனம் 11 தேஜஸ் ஜெட் விமானங்களை நிறைவு செய்துள்ளது, அவற்றில் நான்கு ஏற்கெனவே புதிய ஜிஇ எஞ்சின்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்திய விமானப்படையின் தற்போதைய போர் விமானப் படைகளின் எண்ணிக்கை, அதன் முழுமையான வான்வெளியைப் பாதுகாக்கத் தேவைப்படும் எண்ணிக்கையைவிட குறைவாக உள்ளதால், இந்தியாவின் வான்வெளிப் பாதுகாப்பிற்கு இந்தக் கொள்முதல் நடவடிக்கை மிகவும் முக்கியமானது. 

நாட்டிற்குத் தேவையான பாதுகாப்புத் தளவாடங்களைச் சொந்தமாகவே  தயாரித்துக் கொள்ள வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்திற்கு மையமாக தேஜஸ் திட்டம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்