தங்கத்தை வாங்கிக் குவிக்கும் இந்திய, சீன நாட்டுப் பெண்கள்

தங்கத்தை வாங்கிக் குவிக்கும் இந்திய, சீன நாட்டுப் பெண்கள்

2 mins read
இந்தியக் குடும்பங்களிடம் 34,600 டன் தங்கம் உள்ளது
421ab57f-b6ec-410a-a98a-6eee4aebf052
தரவுகள் படி இந்தியப் பெண்களிடம் மட்டும் ஏறத்தாழ 28,000 டன் தங்கம் உள்ளது. இது உலகில் உள்ள ஒட்டுமொத்தத் தங்கத்தில் 16 விழுக்காடு ஆகும். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லண்டன்: கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே வந்தது. தங்கத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களும் நல்ல லாபத்தைப் பெற்றனர்.

முதலீட்டாளர்களைப் போல அதிக லாபம் கிடைத்தவர்கள் பட்டியலில் நடுத்தர வயது இந்திய நாட்டுப் பெண்களும் சீன நாட்டுப் பெண்களும் உள்ளனர்.

“சீன நாட்டுப் பெண்கள் தங்கக் கட்டிகள், நாணயங்கள் உள்ளிட்ட தங்கம் சார்ந்த பொருள்களை அதிக அளவில் வாங்கி வருகின்றனர். உலகில் தங்கப் பொருள்கள் வாங்குபவர்களில் மூன்றில் ஒருவர் சீனப் பெண்ணாக உள்ளார்,” என்று ‘விமன் & வெல்த்’தில் வெளியான தகவல் கூறுகிறது.

2025ஆம் ஆண்டு சீனாவில் 432 டன் தங்கக் கட்டிகள், நாணயங்கள் வாங்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 28 விழுக்காடு அதிகம்.

சீனாவின் சொத்துச் சந்தை, பங்குச் சந்தை ஆகியவற்றில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காததால் அந்நாட்டு மக்கள் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வீ சேட் (WeChat), அலிபே (Alipay) உள்ளிட்ட தளங்கள் மூலமாகவும் தங்கத்தின் பங்குகள், நகைகள் ஆகியவற்றை சீனர்கள் வாங்குகின்றனர்.

பரம்பரைச் சொத்து

இந்தியாவில் எப்போதுமே தங்கத்தின் மீது அதிக மோகம் உண்டு. பரம்பரை பரம்பரையாகத் தங்கத்தை வாங்கும் போக்கு உள்ளது. தற்போதைய தலைமுறை வாங்கும் தங்கம் அடுத்த வரும் தலைமுறைக்கும் சொத்தாகக் கொடுக்கப்படும் பழக்கம் உள்ளது.

இந்தியக் குடும்பங்களிடம் 34,600 டன் தங்கம் உள்ளது. அது 6,000க்கும் அதிகமான யானைகளுக்குச் சமமானது. 34,600 டன் தங்கத்தில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு பெண்களிடம் உள்ளது.

தரவுகள் படி இந்தியப் பெண்களிடம் மட்டும் ஏறத்தாழ 28,000 டன் தங்கம் உள்ளது. இது உலகில் உள்ள ஒட்டுமொத்தத் தங்கத்தில் 16 விழுக்காடு ஆகும். உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தைவிட இந்தியப் பெண்களிடம் உள்ள தங்கம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்கத்தை முதலீடாகப் பார்க்காமல் இந்தியர்கள் சேமிப்பாகப் பார்க்கின்றனர். குடும்பங்களிடம் உள்ள தங்கத்தில் பெரும்பாலானவை நகைகளாக உள்ளன.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அதை வாங்கும் போக்கு இந்தியப் பெண்களிடம் குறையவில்லை என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்