அனைத்துலகக் குற்றத் தலைவர் என நம்பப்படும் இந்தியர் மலேசியாவில் கைது

2 mins read
3635bef0-30dc-4059-a867-0a0be4840fd4
மலேசியாவில் அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு போதைப்பொருள் கட்டமைப்பையும் மலேசிய காவல்துறை ஆராய்ந்து வருவதாக அந்நாட்டின் காவல்துறைத் தலைவர் ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார். - படம்: மலேசிய ஊடகம்

கோலாலம்பூர்: எல்லை தாண்டிய போதைப்பொருள் குற்றக் கும்பல் தலைவர் என சந்தேகிக்கப்படும் இந்திய நாட்டவர் ஒருவரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு வரும் அந்நபர், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மறைந்துகொண்டிருந்தார் என்று பெர்னாமா ஊடகம் தெரிவித்துள்ளது. அவர் கடந்த மே மாதம் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டது.

அந்த 30 வயது சந்தேக நபரை புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவும் (ஜேஎஸ்ஜே) போதைப்பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவும் (ஜேஎஸ்ஜேஎன்) சேர்ந்து அதிகாலை 1.35 மணிக்குக் கைது செய்ததாக மலேசியக் காவல்துறைத் தலைவர் ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார். சந்தேக நபர், சுற்றுப்பயணிகளுக்கான பயண உரிமத்தைப் பயன்படுத்தி இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து மலேசியாவில் இருந்து வந்தது சோதனையில் தெரியவந்ததாகவும் திரு ரஸாருதீன் கூறினார்.

“அந்த ஆடவர் மலேசியாவில் நடக்கும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என்பது கூடுதல் விசாரணையில் தெரியவந்தது.

“எனினும், அந்த ஆடவருக்குப் பின்னால் செயல்படும் கும்பல் உள்ளதா என்பதை அறியவும் அவர் மலேசியாவில் ரகசியக் குற்றக் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ளவும் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, கூடுதல் உளவுத்துறைத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன,” என்றும் அவர் விவரித்தார்.

அந்த ஆடவர், கடந்த செவ்வாய்க்கிழமை (மே 27) மாலை 6.54 மணிக்கு விமானத்தில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் திரு ரஸாருதீன் தெரிவித்தார். சந்தேக நபரை இந்திய அரசாங்கம் தேடப்படும் தனிநபர் அல்லது தப்பியோடிய குற்றவாளி என வகைப்படுத்தியிருப்பதாகவும் திரு ரஸாருதீன் குறிப்பிட்டார்.

அனைத்துலகப் போதைப்பொருள் குற்றக் கும்பல் ஒன்றின் தலைவர், மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பிறகு இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவால் கைது செய்யப்பட்டார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் கடந்த புதன்கிழமை (மே 28) தெரிவித்தது.

சந்தேக நபர் வழிநடத்துவதாகக் கூறப்படும் அனைத்துலகக் குற்றக் கும்பல் 635 மில்லியன் ரிங்கிட் (சுமார் 192 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான போதைப்பொருளைக் கடத்தி உள்ளதாக நம்பப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்படும் போதைப்பொருளும் கடத்தப்படுவதாகக் கூறப்படுவதும் இதில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்